
posted 20th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
பெண் அதிபரின் நியமனம் - எதிர்த்து நேற்று போராட்டம்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாளப் போராட்டமொன்று நேற்று (19) திங்கட்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நேற்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
208 ஆண்டுகளைக் கடந்த ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விசனம் தெரிவித்தனர்.
கல்லூரியின் முன்னாள் அதிபராக செயற்பட்ட எஸ். இந்திரகுமாரை மீண்டும் நியமிக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அண்மையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அதிபர் வெற்றிடம் ஏற்பட்ட போது, பதில் அதிபராக இந்திரகுமார் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பாடசாலை அதிபர் வெற்றிடத்தை நிரப்ப அண்மையில் கல்வியமைச்சினால் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 5 பேர் கலந்து கொண்ட நிலையில், எந்தவிதமான அரசியல் சிபாரிசும் - தலையீடும் இல்லாமல் - பாடசாலையின் பிரதி அதிபராக தற்போது கடமையாற்றி வரும் திருமதி சுகந்தினி செல்வகுமாரன் அதிக புள்ளிகள் பெற்றி அதிபராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலைமையில், திருமதி சுகந்தினி செல்வகுமாரன் பாடசாலை அதிபராக பதவியேற்க தயாரானபோது, தற்போதைய பதில் அதிபர், எதிர்வரும் புதன்கிழமை கடமைகளை ஒப்படைக்க அவகாசம் கோரியதாக பாடசாலை பழைய மாணவர் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், குறித்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)