
posted 4th February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சுதந்திர தினத்துக்கு எதிராக கிளிநொச்சியில் மாணவர்கள் தடைகளை மீறிப் போராட்டம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் இன்று (04) ஞாயிறு கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் மீது பொலிஸார் தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரை விசிறி அடித்தும் தாக்கினர். அத்துடன், 5 மாணவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
நாட்டின் சுதந்திர நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்கள் என்பன அழைப்பு விடுத்திருந்தன. அத்துடன், கிளிநொச்சியில் பேரணிக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றில் தடை கோரப்பட்ட நிலையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உட்பட ஐந்து பேருக்கு எதிராக தடை உத்தரவை பொலிஸார் பெற்றனர்.
இன்று (04) ஞாயிறு காலை 9 மணியளவில் இரணைமடு சந்தியில் போராட்டம் ஆரம்பமானது. கிளிநொச்சி நகரை நோக்கிப் போராட்டம் நகர ஆரம்பித்தது. ஆனால், போராட்டம் ஆரம்பித்த இடத்திலிருந்து சிறிது தூரத்திலேயே பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
தடை வேலிகள் அமைக்கப்பட்ட இடத்தைப் பேரணி அடைந்ததும் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு பொலிஸார் எச்சரித்தனர். போராட்டக்காரர்கள் கலைய மறுத்த நிலையில் அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசித் தாக்கப்பட்டன. அத்துடன், தண்ணீரை விசிறி அடித்தும் பொலிஸார் அவர்களை கலைக்க முயன்றனர். மேலும், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும் நடத்தினர்.
இந்த நிலையில், 5 மாணவர்களை பொலிஸார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். இதன்போது, போராட்டத்தில் பங்கேற்றிருந்த சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாரிடம் இருந்து மாணவர்களை காப்பாற்ற முயன்றனர். இதன்போது இருவர் மீதும் பொலிஸார் தாக்குதல்களை நடத்தினர். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் பாதுகாப்பு பொலிஸாருடனும் முரண்பட்டனர்.
போராட்டத்தின்போது ஏற்பட்ட கலபரங்களால் அந்தச் சூழல் முழுவதும் பதற்றம் நிலவியது. நிலைமைகள் ஓரளவுக்கு சுமுகமானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்குமாறு கோரி பொலிஸாருடன் பேச்சு நடத்தப்பட்டது. பேச்சில் சுமுக நிலை எட்டப்படாத நிலையில், மாணவர்கள் யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)