
posted 12th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
குமாரபுரப் படுகொலை - சம்பந்தப்பட்டோர் விடுதலை
திருமலை குமாரபுரம் படுகொலையின் 28ஆவது ஆண்டு நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
படுகொலை இடம்பெற்ற குமாரபுரத்தில் நடந்த இந்த நிகழ்வில், பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
நினைவேந்தலில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் க. லவகுசராசா, தவத்திரு வேலன் சுவாமிகள் உட்பட பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
திருகோணமலை - கிளிவெட்டி – குமாரபுரத்தில் 1996 பெப்ரவரி 11ஆம் திகதி நுழைந்த இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியும், வாளால் வெட்டியும் பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 பேரை கொன்றனர்.
இதன்போது, 15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமையும் நெஞ்சை உலுக்கிய சம்பவமாகும்.
இந்தப் படுகொலை தொடர்பான வழக்கில் 8 இராணுவத்தினர் சாட்சியாளர்களால் அடையாளம் காட்டப்பட்டனர். ஆரம்பத்தில் மூதூர் நீதிமன்றில் நடந்த இந்த வழக்கு பின்னர் திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கும், தொடர்ந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கும் மாற்றப்பட்டன. இந்தப் படுகொலை நடந்து 20 வருடங்களின் பின்னர் 2016ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களில் எஞ்சியிருந்த 6 இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டனர்.
எனினும், பாதிக்கப்பட்ட மக்கள் தமது உறவுகளுக்கு நீதி வேண்டி தொடர்ந்து போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)