
posted 23rd February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா
பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இன்று (23) வெள்ளி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்திய பக்தர்களின் வருகையின்மையால் இந்த முறை திருவிழா சோபையிழந்து காணப்பட்டது.
இத் திருவிழாவானது கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சுரூபப் பவனி ஆகியன இடம்பெற்றன.
இவற்றில் இலங்கையை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து பக்தர்கள் எவரும் வருகை தராத நிலையில் 5 அருட்தந்தையர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.
எல்லை தாண்டி இலங்கைக் கடலில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் ஆறு பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததுடன், கச்சதீவு உற்சவத்தையும் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். இதன் காரணமாகவே அவர்கள் திருவிழாவில் பங்கேற்கவில்லை.
இதேசமயம், நாளை (24) சனிக்கிழமை காலை கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவுபெறும்.
பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள், போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)