
posted 24th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
30 வருட நிறைவையொட்டி முக்கிய செயற்திட்டங்கள்
கிழக்கிலங்கையில் சமூக நலனோம்பு செயற்திட்டங்களை முன்னெடுத்துவரும் பிரபல தன்னார்வ நிறுவனமான கிழக்கு நட்புறவு ஒன்றியம், தமது முப்பது வருட நிறைவையொட்டி, மக்கள் நலன்சார்ந்த முக்கிய செயற்திட்டங்களை முன்னெடுக்கவிருக்கின்றது.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது நகரில் தலைமையகத்தையும், பிரபல சமூக சேவையாளரும், பொறியியலாளருமான எம்.எம். நஸீர் அவர்களைத் தவிசாளராகவும் கொண்டு நற்பணிகள் ஆற்றிவரும் கிழக்கு நட்புற ஒன்றியம் இந்த வருட இறுதியில் தமது முப்பது வருட நிறைவைக் கொண்டாடவிருக்கின்றது.
மேற்படி முப்பது வருட நிறைவை முன்னிறுத்தியே மக்கள் நலன் சார்ந்த முக்கிய செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் பொறியியலாளர் நஸீர் தெரிவித்தார்.
இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று சாய்ந்தமருதில் தவிசாளர் பொறியியலாளர் நஸீர் தலைமையில் நடைபெற்றபோது, தவிசாளர் உட்பட உப தவிசாளர் எம்.எம். ஜுனைடீன், நிருவாகப் பணிப்பாளர் யூ.எல்.எம்.பைஸர் (பிரதம தபாலதிபர்), நிதிப் பணிப்பாளரும், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினருமான ஏ.எல்.எம். சலீம் ஆகியோர் முக்கிய திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
இதன்படி 30 க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்புக்காக இருவருடங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வீதம் (மாதாந்தம்) புலமைப்பரிசில் வழங்குதல், ஊனமுற்றோர் 30 பேருக்கு அவர்களுக்கான செயற்பாட்டு உபகரணங்கள் வழங்குதல் (தள்ளுவண்டிகள் போன்றவை), தலா 30 குடும்பத்தினருக்கு மின்சார மற்றும் குடிநீர் இணைப்புக்களைப் பெற்றுக்கொடுத்தல் ஆகிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஒன்றிய தவிசாளர் பொறியியலாளர் நஸீர் தெரிவித்தார்.
மேலும், ஏற்கனவே 50 மில்லியன் செலவில் உத்தேசிக்கப்பட்டுள்ள ஒன்றியத்தின் தலைமைச் செயலகக் கட்டிட நிர்மாணப்பணிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக நிதிப் பணிப்பாளர் ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார்.
நிருவாகப் பணிப்பாளர் யூ.எல்.எம். பைஸர் (பிரதம தபாலதிபர்) இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடுகையில்,
சுனாமி, கொரோணா போன்ற அனர்த்த காலகட்டங்களில் கிழக்கு நட்புறவு ஒன்றியம் பாதிக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த முன்னெடுத்த ஒன்றியத்தின் வேலைத்திட்டங்களையும், கடந்த 30 வருடகால சேவைத்திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.
உபதவிசாளர் எம்.எம். ஜுனைடீன் தெரிவிக்கையில், 30 வருட நிறைவுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் தாமதமின்றி செயற்படுத்தப்படவுள்ளதாகவும், காலக்கிரமத்தில் மேலும் பல சேவைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை ஒன்றியத்தின் 30 வருட நிறைவு விழாவைப் பல்வேறு சமூக நலத்திட்டங்களுடன் கொண்டாடவிருப்பதுடன், பெரும்பாலும் நிர்மாணிக்கப்படவிருக்கும் செயலக கட்டிடத்தொகுதியிலேயே இவை தொடர்பான நிறைவு விழாவை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் ஒன்றியத்தலைவர் பொறியியலாளர் நஸீர் மேலும் தெரிவித்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)