
posted 2nd February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தும்பளை புனித லூர்து அன்னையின் யாத்திரைத் திருத்தல விழா ஆரம்பம்
(எஸ் தில்லைநாதன்)
யாழ் மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க யாத்திரைத்தலங்களில் ஒன்றான பருத்தித்துறை, தும்பளை புனித லூர்து அன்னையின் யாத்திரைத் திருத்தல திருவிழா இன்று2ஆம் திகதி வெள்ளிக்கிழமை பருத்தித்துறை பங்குத் தந்தையும் மறைக்கோட்ட முதல்வரும் திருத்தல பரிபாலகருமாகிய அருட்பணி ஏ.எவ். பெனற் அடிகளாரின் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
தினமும் மாலை 4.30 மணிக்குச் திருச்செபமாலையுடன் நவநாள் வழிபாடுகள் நடைபெறும்.
10ஆம் திகதி சனிக்கிழமை வழிபாட்டில் திவ்விய நற்கருணை விழாத் திருப்பலியும், ஆராதனையும், பவனியும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணியாளர் பி.ஜே. ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் இடம்பெறும்.
11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கும், 7.00 மணிக்கும் திருவிழாத் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும். 7.00 மணிக்கு நடைபெறும் திருவிழாத் திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரட்திரு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமை தாங்கி ஒப்புக்கொடுப்பார்.
திருப்பலியின் நிறைவில் புனித லூர்து அன்னையின் திருச்சொருபப் பவனியும் ஆசீரும் இடம்பெறும்

எமது போராட்டங்களை அடக்கவே நிகழ்நிலை காப்புச் சட்டம் அமுல்!
(எஸ் தில்லைநாதன்)
எமது போராட்டங்கள், எமது மக்களின் பிரச்சினைகளை வெளியுலகிற்கு கொண்டு செல்லும் ஊடகங்களை அடக்கவே நிகழ்நிலை காப்பு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராசா தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராசாவின் ஊடக சந்திப்பு யாழ். கொடிகாமத்தில் நேற்று (01) வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாதச் சட்டம் ஆகிய இரண்டும் இன்று பேசு பொருளாகும். சுயமாக போராடும் இனத்தின் மீது கொண்டுவரப்பட்ட சட்டம் பயங்கரவாத தடைச் சட்டம்.
எமது போராட்டங்கள், எமது மக்களின் பிரச்சினைகளை வெளியுலகிற்கு கொண்டு செல்லும் ஊடகங்களை அடக்கவே நிகழ்நிலை காப்பு சட்டம் கொண்டுவரப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு எதிராக பாரிய போராட்டத்தை முன்னெடுத்தார். அதன்போது கூட அடக்குமுறை பாவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கே அப்படி என்றால் எங்கள் நிலை என்னவாக இருக்கும்.
சிங்கள தலைவர்கள் தாங்கள் ஆட்சியில் உள்ள போது ஒரு மாதிரியாகவும், இல்லாத போது இன்னொரு மாதிரியாகவும் செயல்படுகிறார்கள்.
இதுவரை காலமும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளாகிய நாமே போராட்டங்களை முன்னெடுத்து வந்தோம். நாங்களும் வயதில் முதிர்ந்தவர்காக உள்ளதால் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் இந்த போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தடை செய்யப்பட்ட இழுவை மடியைப் பயன்படுத்திய மீனவர்கள் கைது
(எஸ் தில்லைநாதன்)
மன்னார் மாவட்டத்திலுள்ள மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கடற்கரையில் தடை செய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய இழுவைப் படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் எருக்கலம்பிட்டி மற்றும் உப்புக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
விடத்தல் தீவு மக்கள் மற்றும் கடற்றொழில் திணைக்கள உத்தியோகத்தர்களால் திங்கட்கிழமை இரவு குறித்த மீனவர்கள் கடலில் வைத்து பிடிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விடத்தல் தீவு இறங்குதுறையில் இழுவைப் படகு நிறுத்தப்பட்டுள்ளதோடு, மேலதிக நடவடிக்கைக்காக 5 மீனவர்களும் வலைகளுடன் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நகர சபையினரால் சுற்றிவளைக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள்
(எஸ் தில்லைநாதன்)
வவுனியா நகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 80 கட்டாக்காலி மாடுகள் செவ்வாய்க்கிழமை (30) பிடிக்கப்பட்டன.
வவுனியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
இதனையடுத்து நகர சபைக்குள்ள அதிகாரங்களைக் கொண்டு கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 80இற்கும் மேற்பட்ட கால்நடைகள் நகர சபையினரால் பிடிக்கப்பட்டு தற்போது சபையின் பாராமரிப்பில் உள்ளன.
எனவே, கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளுக்குரிய அடையாளத்தை உறுதிப்படுத்திய பின் தண்டப் பணத்தைச் செலுத்தி அவற்றை மீளப்பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபை அறிவித்துள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய நால்வர் கைது!
(எஸ் தில்லைநாதன்)
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய 4 பேர் மானிப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திங்கள் (29) இரவு 11.30 மணியளவில் கூழாவடிப் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்யும் நடவடிக்கையொன்றுக்காக சிவில் உடையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரே தாக்கப்பட்டவராவார்.
போதைப்பொருள் கும்பலுக்குள் ஊடுருவி தகவல் பெற்றுக்கொண்டு வரும் சமயத்தில், அவரை பொலிஸ் உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அவரது மோட்டார் சைக்கிள் திறப்பு, தலைக்கவசம் என்பவற்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த 4 பேரையும் மானிப்பாய் பொலிசார் மறுநாளே கைது செய்தனர். இவர்கள் சவற்காடு பகுதியைச் சேர்ந்தவர்களாவர். கைதாகியவர்களில் ஒருவரின் வயது 18.
தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சங்கானை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)