
posted 3rd February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
துறைநீலாவணையில் பொங்கல் விழா
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் துறைநீலாவணை பொது மக்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து நடாத்திய பொங்கல் விழா மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா - வில்வரத்தினம் தலைமையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
முன்னதாக துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் சம்பிரதாய முறைப்படி நெற்கதிர் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்று, இவ் ஆலயத்திலிருந்து பண்பாட்டுப் பவனி ஊர்வலம் ஆரம்பமாகியது.
தமிழர்களின் பாரம்பரிய கலாசார அம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இம்பெற்ற பண்பாட்டுப்பவனி ஊர்வலம் துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஆலயத்தை சென்றடைந்து நிறைவு பெற்றது.
இதனைத் தொடர்ந்து பொங்கல் பானையில் புத்தரிசிட்டு பொங்கல் இடம்பெற்றது.
துறைநீலாவணை தொடக்கம் குருக்கள்மடம் வரையுமுள்ள கிராமங்களைச் சேர்ந்த கலை மன்றங்களின் பிரதிநிதிகள். மற்றும் பாடசாலை மாணவர்கள் அறநெறிப் பாடசாலை மாணவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றிய குழுப்பாடல், கிராமிய நடனம், நாடகம், நாட்டார் பாடல் உள்ளிட்ட. கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
இந் நிகழ்வில் பிரதேச செயலர் திருமதி. சிவப்பிரியா வில்வரெத்தினம், உதவி பிரதேச செயலர் திருமதி. சத்தியகௌரி தரணிதரன் ஆகியோர் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி துறைநீலாவணை யுனைட்டெட் விளையாட்டுக் கழகத்தினர் பொன்னாடை போர்த்தி கவிவாழ்த்து வழங்கி கௌரவித்தனர். இந் நிகழ்வுகளை அதிபரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான செல்லையா பேரின்பராசா தொகுத்து வழங்கினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)