
posted 11th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
தமிழ் அரசு பொது செயலர் விவகாரம்
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்டஹ நிர்வாகிகள் தெரிவில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்க்கும் சமரச முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக இன்று (11) ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் கூடுகின்றனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவராக சி. சிறீதரன் தெரிவான பின்னர், பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகளை தெரிவு செய்வதற்கான கூட்டம் கடந்த மாதம் 27ஆம் திகதி திருகோணமலையில் நடந்ததது.
இதில், பலத்த வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் திருகோணமலை மாவட்டத்தின் ச. குகதாசன் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். எனினும், இவரின் தெரிவு தொடர்பில் சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து கட்சியின் தலைமை புதிய நிர்வாகத்தை கிடப்பில் பேணியதுடன், கட்சிக்குள் அமைதியை ஏற்படுத்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், பொதுச் செயலாளர் பதவியை குகதாசனுக்கும் சிறீநேசனுக்கும் தலா ஒரு வருடம் வழங்குவது என்று இணக்கம் எட்டப்பட்டது. எனினும், முதல் வருடத்தில் யாருக்கு வழங்குவது என்பதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இது விடயத்தில் இணக்கம் ஒன்றை எட்டுவதற்காக ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று (11) ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடுகின்றனர்.
இதனிடையே, செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்துமாறு கோரி மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. அது கட்சி தலைமையிடம் இன்றைய தினம் ஒப்படைக்கப்படவுள்ளது என்றும் அறிய வருகின்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)