
posted 21st February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
ஜனாதிபதி தங்காலை காலிக்கு பிரதேசங்களுக்கு நேரடி விஜயம்
நாட்டின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சி காரணமாக சுற்றுலா வலயங்களை அண்மித்த வசதிகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியிருக்கும் அதேநேரம், அது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்கல்ல முதல் காலி வரையுள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கு நேரடியாக விஜயம் செய்திருந்தார்.
இதன்போது சுற்றுலா ஹோட்டல்களுக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது சுற்றுலாத் துறையினர் சுட்டிக்காட்டிய பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகளைத் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு உடனடியாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
கொவிட் - பொருளாதார நெருக்கடியின் விளைவாக இந்நாட்டின் சுற்றுலாத்துறை பெரும் சரிவை சந்திருந்த நிலையில், அரசாங்கத்தின் புதிய திட்டமிடல்களின் பலனாக தற்போது நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி 2023ஆம் ஆண்டில் 7,489,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்திருப்பதோடு, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது இரட்டிப்புத் தொகையாகும்.
2017ஆம் ஆண்டில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்திருக்கும் நிலையில் அந்த இலக்கையும் கடந்து செல்லும் 2024ஆம் ஆண்டுக்கான புதிய திட்டமிடலை அரசாங்கம் கொண்டுள்ளது.
அதேபோல் நாளாந்தம் 500 டொலர்களைச் செலவிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாறாக அதனை விடவும் அதிக தொகையைச் செலவிடக்கூடிய உயர்மட்ட சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக சுற்றுலாத்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி சுற்றுலா வர்த்தகச் சமூகத்திற்கு அறிவுறுத்தியதன் பின்னர் புதிய வேலைத் திட்டத்தின் ஊடாக தங்களது வர்த்தகச் செயற்பாடுகளில் புதிய பரிணாமத்தை எட்டியிருப்பதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.
சீனிமோதர, திக்வெல்ல, நில்வெல்ல, ஹிரிகெட்டிய, வெலிகம, ஹபராதுவ பகுதிகளில் அமைந்திருக்கும் சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் வெலிகம - அலைச்சறுக்கு பயிற்சி கல்லூரிக்கும் விஜயம் செய்து அதன் செயற்பாடுகளை ஜனாதிபதி நேரில் ஆராய்ந்தார்.
பின்னர் உடவடுன சுற்றுலா வலயத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கான அவர்களது யோசனைகளையும் கேட்டறிந்துக்கொண்டார். அதனையடுத்து காலி - தங்காலை கடற்கரைகளில் கூடியிருந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, தனது வருகையை அறிந்து வீதியின் இரு பகுதிகளிலும் கூடியிருந்த மக்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
இந்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவங்கள் பலவற்றை பெற்றுகொடுப்பதற்கான முயற்சிகளில் பல காலமாக ஈடுபட்டு வரும் Jeffry Dobbs என்பவரும் ஜனாதிபதியுடன் இந்த சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)