
posted 29th February 2024
உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
இலங்கைக்கு திரும்பவிருந்த சாந்தன் நேற்று (28) உயிரிழந்தார்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் என்றறியப்பட்ட சுதேந்திர ராஜா (வயது 55) நேற்று (28) புதன்கிழமை உயிரிழந்தார். நேற்றிரவு அவர் இலங்கைக்கு புறப்படவிருந்த நிலையிலேயே காலை 7.50 மணியளவில் மாரடைப்பால் மரணமானார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர்களில் சாந்தனும் ஒருவர். பின்னர், ஆயுள் தண்டனையாக அவர்களின் தண்டனை குறைக்கப்பட்டது. பல வருடங்கள் சிறைத் தண்டனையின் பின்னர் சாந்தன் உள்ளிட்ட இலங்கையர்களான முருகன், ஜெயக்குமார், றொபேர்ட் பயஸ் ஆகியோருடன் ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் கடந்த 2022 நவம்பர் 11ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.
எனினும், இலங்கையர்களான சாந்தன், முருகன், றொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். தம்மை தாயகம் அனுப்பி வைக்குமாறு அவர்கள் அங்கு போராட்டங்களை நடத்தினர்.
இதனிடையே, கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த ஜனவரி 24ஆம் திகதி திருச்சி மருத்துவமனையில் சாந்தன் சேர்க்கப்பட்டார். சிறைச்சாலை உரிமைகள் அமைப்பின் கோரிக்கையை அடுத்து சாந்தன் உயர்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சாந்தன் சேர்க்கப்பட்டார்.
இதனிடையே, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரின் தாயாரான மகேஸ்வரி 35 வருடங்கள் காணாத தனது மகனை நாட்டுக்கு அழைத்து வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பலருக்கும் உருக்கமான கோரிக்கையை முன்வைத்தார். அவர் கோரிக்கை மனுக்களை இந்திய, இலங்கை அரசியல்வாதிகள் பலருக்கும் அனுப்பியிருந்தார்.
இதேபோன்று, சாந்தனும் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்திய உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இலங்கை அரசு ஆவணங்களை அனுப்பி வைத்தால் சாந்தனை இலங்கை அனுப்புவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அவரின் ஆவணங்கள் இழுபறிகளுக்கு மத்தியில் அனுப்பி வைக்கப்பட்டன. ஆவணங்கள் கிடைத்தமையை தொடர்ந்து சாந்தன் இலங்கை செல்வதற்கான அனுமதியை கடந்த வெள்ளிக்கிழமை இந்திய மத்திய அரசாங்கம் வழங்கியது.
இதனிடையே, கல்லீரல் செயலிழப்பால் சாந்தன் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் செவ்வாய் கோமா நிலைக்கு சாந்தன் சென்றார். இதைத் தொடர்ந்து நேற்று புதன் காலை அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அது பலனின்றி நேற்று காலை 7. 50 மணியளவில் உயிரிழந்தார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவின் தலைமை மருத்துவர் பிறேம்குமார் தெரிவித்தார்.
இதனிடையே, சாந்தனின் உடலை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)