
posted 22nd February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதுடன், மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று முன்தினம் 240 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியதுடன், திருக்கோவில் பிரதேசத்தில் சுமார் 10க்கு மேற்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ. கஜேந்திரன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று, மக்களின் நிலைமைகளை பார்வையிட்டார்.
1,500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள், வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன என பிரதேச செயலாளர் ரீ. கஜேந்திரன் தெரிவித்தார்.
கிராமங்களில் உள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணியில், திருக்கோவில் பிரதேச செயலக அனர்த்தப் முகாமைத்துவப் பிரிவுடன் இணைந்து விநாயகபுரம் மீனவ சங்க நிர்வாகிகள், தம்பிலுவில் உரக்கை விவசாய அமைப்பு நிருவாகிகள், இராணுவத்தினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஒன்றினைந்து விநாயகபுரம், கோரைக்களப்பு, திருக்கோவில், முறாவோடை, தம்பிலுவில், பெரிய முகத்துவாரம் என்பன அகழப்பட்டு, வெள்ளநீர் கடலுக்கு விடப்பட்டது.
இதேவேளை, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல பிரிவுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேநேரம், அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்களங்கள், பாடசாலைகள் சிலவற்றில் வெள்ளம் புகுந்துள்ள நிலையில், அலுவலகங்களின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
இதேநேரம் அறுவடைக்குத் தயாராகியிருந்த வயல் நிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி. பபாகரன் தலைமையிலான கணக்காளர் க. பிரகஸ்பதி, சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)