
posted 16th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் தொடர்ச்சியாக பூசை வழிபாடுகளை மேற்கொள்வது உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியில் உள்ள தொல்லியல் சின்னங்கள் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் அனைவரின் செயற்பாடுகள் அமைவது அவசியம் எனவும் தெரிவித்தார்.
பாரம்பரியமாக இந்துக்களினால் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பூசை வழிபாடுகளை தொடர்வதற்கு, அரசாங்க திணைக்களங்கள் சிலவற்றின் கடமைசார் செயற்பாடுகள் இடையூறாக அமைந்துள்ள
நிலையில், குறித்த பகுதிக்கு நேற்று கண்காணிப்பு பயணம் ஒன்றை மேற்கொண்டபோதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், குறித்த விடயம் தொடர்பாக பிரதேச மக்களின் கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் கேட்டறிந்த அமைச்சர், மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்க திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையுமாயின், அவை தொடர்பாக கரிசனை செலுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதுடன், துறைசார் அமைச்சர்களுடனும் பிரஸ்தாபித்து சுமூகமான தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே வெடுக்குநாறி விவகாரம் தொடர்பாக, தமிழ் மக்களின் பிரச்சனைகள் மற்றும் அபிலாஷைகளை தீர்ப்பதற்கான அமைச்சரவை உபகுழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டது.
அதன்போது, சம்மந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று நிலைமைகளை ஆராய்வதுடன், சம்மந்தப்பட்ட துறைசார் அமைச்சர்களுடன் இணைந்து சுமூகமான தீர்வை காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)