வளம் இருப்பினும் அக்கறை வேண்டும்

மன்னார் மாவட்டத்தில் சுயதொழிலுக்கான சகலவிதமான மூலப்பொருட்கள் காணப்படுகின்றபோதும் மன்னார் மக்கள் அக்கறையின்மையாக காணப்படுகின்றனர். குடும்ப வருமானத்தை மேன்மையடையச் செய்ய மெசிடோ நிறுவனம் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் தொழில் வாய்ப்புக்கான கைத்தொழில் அபிவிருத்தி சபை அமைப்புடன் இணைந்து முன்னெடுத்துச் செல்ல ஆய்த்தமாக இருக்கின்றது என மன்னார் மாவட்ட இணைப்பாளர் யாட்சன் பிகிராடோ இவ்வாறு தெரிவித்தார்.

மன்னாரில் மெசிடோ நிறுவனம் மற்றும் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் தொழில் வாய்ப்புக்கான கைத்தொழில் அபிவிருத்தி சபை அமைப்புடன் இணைந்து மன்னார் மாவட்டத்தில் சுய தொழில் வாய்ப்புக்களை மேம்படுத்தும் நோக்குடன் சுய தொழில் வாய்ப்பு விழிப்புணர்வு செயல் அமர்வு செவ்வாய் கிழமை (07) மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

யாட்சன் பிகிராடோ தலைமையில் நடைபெற்ற இத் தொழில் வழிகாட்டலுக்கான கருத்தமர்வில் அவர் உரையாற்றுகைளில்;

கைத்தொழிலை மையமாகவைத்து குடும்பங்களில் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நகர்வதற்காக முயற்சியாளர்களாகிய உங்களை இங்கு ஒன்றுகூட்டியுள்ளோம்.

இன்று எமது நாட்டில் சுயத்தொழில் உற்பத்தி அவசியமாகின்றது. ஆகவே நாம் ஒவ்வொருவரும் இதை நோக்கி நகர வேண்டிய அவசியமாகின்றது.

ஆகவே எமது மன்னார் மாவட்டத்திலும் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உண்டு.

இதனால் மன்னார் மெசிடோ நிறுவனம் கைத்தொழில் அபிவிருத்தி சபையுடன் இணைந்து இச் செயல்பாட்டை முன்னெடுத்துள்ளது.

நாம் விரும்பியோ, விரும்பாமாலோ ஒரு குடும்பத்தில் இருவரும் உழைத்தால் மட்டுமே நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இன்று நாட்டில் உணவுப் பஞ்சம் வான்நோக்கிச் செல்லுகின்றது. படித்தவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் அற்றநிலை உருவாகிவிட்டது.

பல்கலைக்கழகத்தில் ஏட்டுக்கல்வி மட்டுமே உருவாக்கப்பட்டது. ஆனால் கைத்தொழில் அங்கு உருவாக்கப்படவில்லை.

மன்னார் மாவட்டத்தில் எமது கைக்குள் இருக்கும் வளங்களை நாம் தவறவிட்டு வருகின்றோம்.

மன்னார் மாவட்டத்தில் பனை வளங்கள் நிறையக் காணப்படுகின்றன. இதன் மூலம் குழுக்களாக இணைந்து பயன்பெற மெசிடோ நிறுவனம் உதவி செய்ய காத்திருக்கின்றது.

மூன்று மாதங்களில் நல்லதொரு வருமானத்தை பனை வளத்தின் மூலம் பெறக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

இவ்வாறு மன்னாரில் கடல் வளம் , பனை வளம் இவ்வாறு பலவித கைத்தொழிலுக்குரிய மூலப் பொருட்கள் காணப்படுகின்றன.

இவற்றை கண்டுபிடித்து உங்களால் எதை செய்ய முடியுமோ அவற்றை நீங்கள் தெரிந்தெடுத்து, கைத்தொழில் அபிவிருச்தி சபை அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று நீங்கள் பொருளாதாரத்தில் உயர்ச்சி பெறவே இவ்வாறான ஒரு ஒன்றுகூடலையும், கலந்துரையாடலையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.

இந்தியாவில் கைத்தொழிலுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு அங்கு பாமர மக்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேபோன்று உங்களையும் நாம் ஊக்குவித்து உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு நாம் உறுதுணையாக இருக்கின்றோம்.

சிறு சிறு உற்பத்திப் பொருட்கள் வெளி மாவட்டங்களிலிருந்து மன்னாருக்கு விற்பனைக்காக வருகின்றது என்றால் அவைகளை மன்னார் மாவட்ட மக்களும் செய்யக்கூடிய தன்மை இருந்தும் ஏன் அதில் ஆர்வம் காட்டாது இருக்கின்றார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக காணப்படுகின்றது.

நீங்கள் சுய தொழிலில் ஈடுபடும்போது நாங்கள் ஏதோ ஒரு வழி மூலமாக உள்நாட்டிலும் அல்லது இந்தியாவுக்கோ அழைத்துச் சென்று அதற்கான பயிற்சிகளை தருவதற்கு ஆய்த்தமாக இருக்கின்றோம்.

மெசிடோ நிறுவனம் வடக்கு மாகாணத்தில் பல்வேறு விடயங்களை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான திட்டங்களுக்கும் நாம் கவனம் செலுத்தி குடும்ப வருமானங்களை சிறு கைத்தொழில் மூலம் வளமாக்க முடியும்.

இது ஒரு ஆரம்ப கலந்துரையாடலாக இருக்கின்றது. தொடர்ந்து இவ்வாறான கலந்துரையாடலும் உங்கள் தொழில் தொடர்பாகவும் ஆய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கு உங்கள் முயற்சியும் ஒத்துழைப்புமே அவசியமாகும் என தெரிவித்தார்.

வளம் இருப்பினும் அக்கறை வேண்டும்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)