
posted 24th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
யாழ். போதனா மருத்துவமனையின் கிணற்றின் தண்ணீரில் கிருமித் தொற்று அறியப்பட்டது. இது, தற்போது சுத்திகரிக்கப்பட்டுள்ளது. எனினும், முன்னர் 400 பேர் வரை கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்று மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா மருத்துவமனையில் புதன் (22) அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
யாழ். போதனா மருத்துவமனையில் தேங்கும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு பண்ணைக்கடலில் செலுத்தப்பட்டு வருகின்றது. இது கடந்த இருபது வருடங்களாக செயல்பட்டு வரும் நடைமுறையாகும். இந்தச் செயல் முறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப தடங்கலால் கடந்த இரண்டு வருடங்களாக முறையாக செய்யப்படவில்லை. இதனால், பண்ணையிலுள்ள சுத்திகரிக்கப்படும் இடத்தில் கழிவு நீர் வீதிகளில் வடிந்து பொதுமக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியது.
இது தொடர்பில் போதனா மருத்துவமனை நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது. நிர்வாகம் இதனை சீராக்க நடவடிக்கை எடுத்தது. இதன்போது, பண்ணையிலுள்ள கழிவு நீர் தொட்டிக்குள் இறங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால், போதனா மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் சில மணித்தியாலங்கள் இடைநிறுத்தப்பட்டன. இதனால் யாழ். போதனா மருத்துவமனையில் கழிவு நீர் அதிகரித்தது.
இதேநேரம் யாழ். போதனா மருத்துவமனையில் குடிப்பதற்கு, கை கழுவுவதற்கு என்று இரு விதமாக தண்ணீரைப் பெறுகிறோம். திருநெல்வேலியிலிருந்து கிடைக்கும் தண்ணீர், மருத்துவமனை வளாகத்தில் மூன்று கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீரை இவற்றுக்காக பயன்படுத்துகிறோம். இவற்றின் நீரை குளோறின் இட்டு தினமும் சுத்திகரிக்கப்படுவது வழமை.
கழிவுநீர் செல்வது தடைப்பட்டமையால் சடுதியாக நிலமட்டத்தில் கழிவு நீரின் தன்மை அதிகரித்தது. இதனால், யாழ். போதனா மருத்துவமனையின் நீர்நிலைகளில் கிருமி தாக்கம் ஏற்பட்டது. இதன் வெளிப்பாடாக யாழ். போதனா மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், சத்திர சிகிச்சை பிரிவு, விடுதிகளில் பணி செய்பவர்கள் என 400இற்கும் மேற்பட்டவர்கள் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் மருத்துவ அறிவு உள்ளவர்கள் என்பதால் தாமாகவே சிகிச்சை எடுத்தனர். 50 பேரளவில் மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றனர்.
தண்ணீரில் கிருமித்தொற்றின் தாக்கம் எமக்கு உடனடியாக தெரியவந்த நிலையில் கடந்த சனிக்கிழமை உடனடியாகவே கிணற்று நீரை பரிசோதனைக்காக அனுப்பினோம். அத்துடன், குளோறின் இட்டு கிருமி தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவில் ஒருவகை பற்றீரியா காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மிகையான குளோறின் ஊட்டத்தின் மூலம் இந்த கிருமிகள் அழிக்கப்பட்டன. தற்போது கிருமித் தொற்று நிலைமை கட்டுக்குள் உள்ளது இது ஒரு தற்காலிகமாக ஏற்பட்ட பிரச்சனையே தவிர திட்டமிடப்பட்டது அல்ல. இதனை சீர் செய்துள்ளோம். மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)