
posted 9th February 2023
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட 81 பெட்டிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் பரிசோதனைக்கு உட்படுத்த எட்டு மாதங்கள் நடைபெற வேண்டும் என வைத்திய குழாம் மன்றில் முன்வைக்கப்பட்டதை மன்று கட்டளையாக்கியுள்ளது.
திருக்கேதீஸ்வரப் பகுதியில் 2013 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த மனித புதைகுழி வழக்கானது, அனுராதபுர நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட மாதிரி மனித எச்சங்களை அமெரிக்கா புலோரிடா நிறுவனத்துக்கு காபன் பரிசோதனைக்காக கொண்டு செல்வதற்கு மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இவ் வழக்கு வியாழக்கிழமை (09) மன்னார் மாவட்ட நீதவான் தீதிமன்ற நீதிபதி கே.எல்.எம். சாஜித் முன்னலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
ஏற்கனவே ஜனவரி மாதம் 09ந் திகதி (09.01.2023) அநுராதபுரம் வைத்தியசாலையில் பாகாப்பு நோக்கி வைக்கப்பட்டிருந்த மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் கொண்ட 81 பெட்டிகளிலிருந்து 5
பெட்டிகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. இப் பெட்டிகள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்ற காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த சான்று பொருட்களை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி மன்னார் நீதவான் நீதிமன்ற காப்பகத்துக்கு சேர்பிக்கும்படி குற்ற புலணாய்வு பிரிவினருக்கு கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு ஒன்றிலிருந்து முப்பது வரைக்கான பெட்டிகள் ஏற்கனவே இதற்கு பொறுப்புவாய்ந்த சட்டவைத்திய அதிகாரியினால் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
அவைகளையும் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற இருக்கின்றது. இதற்கும் காணாமல் போனோர் உறவினர்கள் சார்பில் மன்றில் ஆஜராகிவரும் சட்டத்தரணிகள் பங்குபற்றுவதற்கும் கட்டளை ஒன்று ஆக்கப்பட்டுள்ளது.
இந்த எழும்புகளிலிருந்து வயது , பால் போன்ற இறப்பகளுக்கான காரணம்போன்ற விடயங்கள் ஆய்வுக்கு உள்ளாக்கப்படும் என்றும்,
இந்த மனித எச்சங்கள் கொண்டுள்ள 81 பெட்டிகளும் பரிசோதனைக்கு உட்படுத்த எட்டு மாதங்கள் நடைபெற வேண்டும் என்றும் இது தொடர்பான வைத்திய குழாவினர் மன்றில் தெரியப்படுத்தியிருந்தனர்.
இதன் அடிப்படையில் இவ்வாறான கட்டளைகள் இன்றைய (09) விசாரணையில் ஆக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கு மேலதிக நடவடிக்கைகளுக்காகவும், நடவடிக்கை அறிக்கைகளுக்காகவும் எதிர்வரும் சித்திரை மாதம் மூன்றாம் திகதி (03.04.2023) அன்று மீண்டும் மன்னார் நீதவான் நீதிமன்றில் அழைக்கப்படும் என கட்டளையிடப்பட்டுள்ளது.
இவ் வழக்கின்போது இன்றைய தினம் குற்ற புலனாய்வு பிரிவினரைச் சேர்ந்த பண்டார மற்றும் மனோச் ஆகியோரும் சட்டவைத்திய அதிகாரி டீ.எல். வைத்தியரத்தின மற்றும் ஹேவகேவும், மேலும் காணாமல் போனோர் குடும்பங்களின் சார்பில் சிரேஷ்ட சட்டத்ரனி றனித்தா ஞானராஜாவுடன் சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் இவர்களுடன் காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் சட்டத்தரணியும் ஆஜராகி இருந்தனர் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக இவ் வழக்கில் முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயப் பகுதியிலிருந்து மாந்தை பகுதிக்கு நிலத்தடியின் ஊடாக குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தில் ஆலய வீதிக்கு அருகாமையில் 2013 ஆம் ஆண்டு நீர் வழங்கல் சபையினால் குழாய்கள் பதித்துச் சென்றபோதே இவ் மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் 81 பெட்டிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)