
posted 22nd February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த சனிக்கிழமை (18) சுப்பிரிங் கோட் ஓய்வுநிலை நீதிபதியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவியுமான திருமதி றோகினி மாரசிங்க தலைமையிலான குழு மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது மன்னார் பிரஜைகள் குழுவின் பணிப்பாளர் சபை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அவ்சமயம் மன்னார் பிரஜைகள் குழவின் தலைவர் அருட்பணி.ஞானப்பிரகாசம் அடிகளார் மன்னார் மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக மகஜர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தவிசாளரும் ஓய்வுநிலை உயர்நீதிமன்ற கௌரவ நீதியரசர் றோகினி மாரசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அந்த மகஜரில் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் கடந்த கால மற்றும் நிகழ்கால பிரச்சனைகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டதாவது
01. மன்னார் மாவட்டத்திலுள்ள காணிகள் சம்பந்தமான பிரச்சனைகள்
மன்னார் மாவட்டத்தில் அரச படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் மீள மக்களிடம் கையளிப்பதோடு பொதுவான காணிகளும் விடுவிக்கப்படல் வேண்டும்.
வேறு மாவட்ட அரசியல் வாதிகள் மற்றும் அரசியல் முகவர்கள் மன்னாரில் உள்ள மக்களினதும், பொதுக்காணிகளையும் வாங்கி தமதாக்கிக் கொள்கின்றனர். இதனால் வருங்காலத்தில் மக்களுக்கும், அவர்களுடைய சந்ததியினருக்கும் ஏற்படவிருக்கும் அபாயம் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களுக்குகொடுக்கப்பட வேண்டிய காணிகள் அபகரிக்கப்பட்டு சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படுவதனால் இதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கப்படல் வேண்டும். மற்றும் மன்னார் மாவட்ட காணிகள் சரியான முறையில் அளவீடுகள் செய்யப்படாமை அத்துடன் இன்றுவரை முழுமையான வரைபடம் இன்மை.
காற்றாலை. மண் அகழ்வு போன்ற பாரிய திட்டதால் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வழங்கள் சுரண்டப்படுகின்றன.
02. கனியமண் அகழ்வு:
03. 4.கிலோ மீற்றர் அகலமும் 36 கிலோ மீற்றர் நீளமும் கொண்ட (4816 சதுர கிலோ மீற்றர்.) மன்னார் தீவினுள் அரச மற்றும் தனிப்பட்ட முகவர்களால் 4500 க்குமேல் துளைகள் 50 அடிக்கு கீழ் இடப்பட்டு கனியமண் அகழ்வு இதுவரை செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இதில் எடுக்கப்பட்ட மண்கள் பரிசோதிக்கப்பட்டதுடன் மன்னார் தீவினுள் அனைத்து பிரதேசங்களிலும் கனியமண் அகழ்வு பரிசேதனை செய்யப்பட்டுள்ளது. தொடர் நடவடிக்கைக்காக இக்கனிய மண்ணை ஆய்வு செய்ய அவுஸ்திரேலியாவிலுள்ள தனிப்பட்ட கம்பனிகளுக்கு இம்மண்ணை விற்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மன்னார் தீவின் 63 சதவீத நிலப்பரப்புகள் கடல் மட்டத்தின் கீழ் உள்ளது. இக்கனிய மண் அகழ்வு தொடருமானால் தற்போது நடைமுறையிலுள்ள கால நிலை காரணமாக மன்னார் தீவு முற்று முழுதாக நீரில் மூழ்கும் அபாய நிலை காணப்படுவதால் இக்கனிய மண் அகழ்வு உடன் தடைசெய்யப்படல் வேண்டும்.
இந்நடவடிக்கையினால் மன்னார் தீவினுள் உள்ள இயற்கை குடிநீர் முற்றாக பாதிக்கப்படுவதுடன் மன்னார் தீவினுள் காணப்படும் பனை, தென்னை போன்ற பயன்தரும் மரங்கள் முற்றாக பாதிக்கப்பட்டு சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும். இதனால் மக்கள் தீவினுள் வாழமுடியாத நிலை ஏற்படும். எனவே இச் செயற்பாட்டை உடன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
04. உயர் மின்வலுக்காற்றாலை செயற்திட்ட நடவடிக்கை
மன்னார் தீவினுள் இதுவரை 36 இற்குமேற்பட்ட உயர் மின் வலுக்காற்றாடிகள் அமைக்கப்பட்டு தொடர்ந்தும் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் 100 இற்கும் மேற்பட்ட உயர்மின்வலுக் காற்றாடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மன்னார் தீவை உயர் மின்வலுக் காற்றாடிகளின் பண்ணையாக மாற்றவும் திட்ட மிடப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு மின்வலுக் காற்றாடிக்கு 07 தொடக்கம் 10 ஏக்கர் நிலப்பரப்பை சுவீகரிக்கவும் விசேட சட்ட மூலம் இந் நிலங்களை அரசுடமையாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு இந்நிலங்கள் சுவீகரிக்கப்படுவதனால் மன்னார் தீவினுள் வசிக்கும் மக்களின் இருப்பு கேள்விக் குறியாகிவிடும்.
30 வருடங்களுக்கு மேலாக இம்மக்கள் போரினால் பாதிக்கப்பட்டு யாவற்றையும் இழந்து சீவிப்பதற்கு கஷ்டப்படும் நிலையில் இச்செயற்திட்டங்கள் நடை பெறுமானால் இவர்களுடைய வாழ்வாதாரம் பாதிப்பு நிலை ஏற்பட்டு இம்மக்கள் மன்னார் தீவை விட்டு வெளியேறும் ஒரு துர்பாய்க்கிய நிலை ஏற்படும். எனவே இதை நிறுத்தி மன்னார் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
05. மீனவர்கள் பிரச்சனைகள்
மன்னார் மாவட்டத்தின் கூடிய நிலப்பரப்பு கடலுக்கு அண்மையில் காணப்படுவதனால் முள்ளிக்குளம் தொடக்கம் மன்னார் தீவு உட்பட தேவன்பிட்டி வரை அநேக மீனவ கிராமங்கள் காணப்படுகின்றது. இவர் களின் அடிப்படை வாழ்வாதாரமாக மீன்பிடித்தொழில் காணப்படுகின்றது.
முன் குறிப்பிட்ட செயற் திட்டங்களின் மூலமும் 30 வருட கால போரினாலும் அநேகமான மீன்பிடிக் குடும்பங்கள் தொழில் செய்ய முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகி தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாது கஷ்டப்படுகின்றார்கள்.
அத்துடன் தற்போதைய எரிபொருள் வழங்களின் பற்றாக்குறை காரணமாகவும் மேற்குறிப்பிட்ட செயற்திட்டங்களின் காரணமாக தங்கள் வாழ்வாhரத்தை இழந்;து மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே மேற்குறிப்பிட்ட கெடுபிடிகள் நீக்கப்பட்டால்தான் இவர்களுக்குரிய வாழ்வாதாரம் வழங்கப்படும் எனவும் அத்துடன் நஷ்;ட ஈடும் அரசினால் வழங்கப்படவேண்டும் என்பதனையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றோம். அத்துடன் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட காற்றாடிகள் மற்றும் ஏனைய திட்டங்களினால் மீன்பிடியின் அளவுகள் குறைக்கப்பட்டுள்ளது.
5. போதைப்பொருள் பாவனை
தற்போதைய நாட்டின் நிலமையில் போதைப்பொருள் பாவனை மிகவும் உயர்வான மட்டத்தில் காணப்படுகின்றது. இதில் முக்கியமாக இளையோர் மட்டத்தில் இப்போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது. இம்மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் இப்போதைப் பொருட்கள் நாளாந்தம் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு நடவiடிக்கைகள் மிகவும் இறுக்கமாக காணப்பட்டாலும் போதைப்பொருள் கடத்தல் சர்வ சாதாரணமாக காணப்படுகின்றது. இதனால் தற்போது பாடசாலை மட்டத்திலிருந்து இப்போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும் நிலை
எமது மாவட்டத்தை சுற்றி இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகாக கடற்படை, தரைப்படை, பொலிஸ்படை காணப்பட்டாலும் போதைப்பொருள் விற்பனை சாதாரணமாக காணப்படுகின்றது.
எனவே இப்போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாமல் செய்யுமாறும் கேட்டு;க்கொள்வதோடு இதனால் கல்வி மற்றும் கலாச்சார சீரழிவுகளும் ஏற்படுகின்றது.
6.பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல்
அநேகமாக உலக நாடுகளில் காணப்படாத பயங்கரவாத தடைச்சட்டம் எமது நாட்டில் 30 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து எமது ஜனநாயக நாட்டில் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தக் கொடூரமான தடைச்சட்டத்தினால் இதுவரை அப்பாவி பொது மக்கள் குற்றம் இளைக்காதோர் மற்றும் அரசியலில் ஈடுபடாத அப்பாவி பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்ட அநேகமான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். தற்போதும் சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இச்சட்டதின் மூலம் எமது அடிப்படை உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகள் முற்றாக நசுக்கப்பட்டு மக்கள் அடிமைகளாக, ஏதிலிகளாக நடாத்தப்பட்டு வருகின்றனர்.
இச்சட்டத்தின் துணையுடன் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட அநேக தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதுவரை காணாமல் ஆக்கப்;பட்டவர்களில் ஒருவரைக்கூட குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.
இதனால் அநேகமான இளையோர் நாட்டைவிட்டு சட்டரீதியாகவும், சட்ட ரீதியற்ற முறையிலும் வெளியேறுகின்றனர். வெளி யேறியும் உள்ளனர். இப்பயங்கரவாத தடைச் சட்டமானது இலங்கையில் உடன் நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
7 விவசாயமும் பண்ணை நிர்வாகமும்
கடந்த 30 ஆண்டுகளாக எமது போரின் விளைவுகளாக எமது மாவட்டத்தில் விவசாயம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசின் சட்ட திட்ட நடவடிக்கைகளால் விவசாயிகள் நெற்செய்கைகள் மற்றும் ஏனைய பயிர்செய்கைகள் உரம், கிருமிநாசினிகள் இன்மையினால் முற்று முழுதாக பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தை முற்றாக இழக்கும் நிலை காணப்படுகின்றது.
எமது மாவட்டத்தில் கடற்றொழில் பாதிக்கப்பட்டதுபோல பெருநிலப்பரப்பிலுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். ஏனைய வளங்களோ, தொழில்களோ எமது மாவட்டத்தில் காணப்படாத காரணமாக மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இதைவிட விவசாயத்திற்காக முக்கியமாக மாவட்டத்தில் இருக்கும் கட்டுக்கரைக்குளம் மற்றும் ஏனைய குளங்கள் புனரமைக்கப்படாமலும் நீர்ப்பாசன வழங்கள் நிறைவடையாமலும் கால்வாய்;கள் ஒழுங்கான முறையில் பராமரிக்கப்படாமலும் காணப்படுகின்றது. எனவே இந்த விவசாயத்தையயும், பண்ணை வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
வாழ்வாதார பிரச்சனைகள்
மன்னார் மாவட்டத்தில் பிரதான வாழ்வாதாரமான மீன்பிடித்தொழிலும் விவசாயமும் காணப்படுகின்றது. எமது மாவட்டத்தில் தற்போதுள்ள சனத்தொகை விகிதப்படி இத்தொழில்கள் செய்யப்படுவதில்லை.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தங்களுடைய அனைத்து வளங்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மேற்கூறப்பட்ட இரு தொழில்களை புரிவதற்குரிய தனிப்பட்ட தொழில்சாலைகளோ, நிறுவனங்களோ எமது மாவட்டத்தில் இல்லை. சமூர்திகொடுப்பனவுகள் சரியானமுறையில் மக்களுக்கு கிடைக்காமை.
அத்துடன் பட்டதாரிகளுக்குரிய வேலைவாய்ப்பும் இல்லாமல் அன்றாட சீவியத்திற்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எனவே இக்கஷ்டங்களை போக்கும் முகமாக வேலைவாய்ப்புக்களை பெறுவதற்குரிய தொழில் கல்விகள் வழங்கும் நிறுவனங்களை எமது மாவட்டத்தில் அமைத்து அன்றாட வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அத்துடன் பரம்பரையாக செய்து வரும் மீன்பிடித்தொழிழை தற்போதைய நவீன மீன்பிடிக் கருவிகளை வழங்கி மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை ஊக்கிவிக்குமாறும் வீட்டுத்தோட்டத்தை செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
9. பிள்ளைகளின் கல்வி மேம்பாடு
கடந்த பல வருடங்களாக இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் பிள்ளைகளின் கல்வி நிலை மிகவும் குறைவாக காணப்படுகின்றது. போர்க்கால சூழலின் பின் சற்று உயர்வாக காணப்படுகின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் பாடசாலை வசதிகளும், ஆளணி வசதிகளும் ஓரளவு முன்னையதைவிட கூடியிருப்பதால் இநிநிலை காணப்படுகின்றது.
ஆனால் பிள்ளைகளது தொழில்நிலைகள் குறைவாக காணப்படுகின்றது. எமது மாவட்டத்தில் தொழில்சார் பெரிய நிறுவனங்களோ, பல்கலைக்கழகங்களோ இதுவரை அமைக்கப்படவில்லை. முக்கியமாக பாடசாலைக் கல்வியில் கணித மற்றும் விஞ்ஞான கற்கை நெறிகளை போதிப்பதற்குரிய கற்கை வளங்கள் திருப்தியாக வழங்கப்படவில்லை.
எனவே எமது பாடசாலைக் கல்வி அபிவிருத்தியை கருத்திற் கொண்டு ஏனைய மாவட்டங்களில் காணப்படுவது போல உயர் தொழில்கல்வி நிறுவனங்களை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அத்துடன் ஆளணி வழங்களையும், பௌதிக வழங்களையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
10. பாதுகாப்பு பிரச்சனைகள்
இலங்கைளில் எமது மாவட்டத்தில் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரால் பரிசோதனை செய்தல் என்ற போர்வையில் ஒவ்வொரு பிரயாணத்தின் போதும் மக்களை பாதுகாத்தல் என்ற பெயரில் பாதுகாப்பு படையினரால் வதைத்துக் கொண்டிருக்கின்றார்கள், சோதனை செய்துகொண்டிருக்கின்றார்கள்.
இதனால் கற்பிணித் தாய்மார்கள், பெண்கள், முதியவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றார்கள். ஆனால் இச்சோதனைச் சாவடிகள் பெரும்பாண்மையுள்ள மாவட்டத்தில் இவ்வாறு அமுல்படுத்தப்படவில்லை.
எனவே மற்றைய மாவட்ட கரையோரம் முழுவதும் கடற்படை பாதுகாப்பு வைத்திருந்தும் மக்கள் தீவிலிருந்து போகும் போதும் வரும் போதும்
போதைப்பொருள் செய்வதாக கூறி எமது மாவட்ட மக்களை தொடர்ந்தும் துன்புறுத்தி வருகின்றார்கள். எனவே எமது மக்களின் அடிப்படை உரிமை கருதி இங்குள்ள சோதனைச் சாவடிகளை நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
11.மனித எச்ச புதைகுழிகள் (மன்னார், மாந்தை)
போர்கால சூழ்நிலையில் மன்னார் மாவட்டத்தின் பல இடங்களிலும் இராணுவ முகாம்களும் ஏனைய பாதுகாப்பு பிரிவினரின் முகாம்களும் பல பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்தன.
அக்காலப்பகுதியில் மாந்தையிலும் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அவ்வேளைகளில் முகாமை அண்டியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து இருந்தனர்.
இந்த முகாமின் அருகில் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்ற ஏ13 வீதியும் அமைந்திருந்தது. பொதுமக்கள் இடம்பெயர்ந்திருந்த காலத்தில் பஸ்போக்குவரத்து நடைபெற்றது. இந்த வேளையில் சில பஸ்கள் பரிசோதனைக்காக செல்லும்போது சில பஸ்கள் வரவில்லை என பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த பஸ்களில் பிரயாணம் செய்த அனைவரும் இராணுவத்தால் பரிசோதனைக்காக கொண்டுசென்ற பயணிகள் திரும்பி வரவில்லை என மக்களால் தெரிவிக்கப்பட்டது. இந்நேரத்தில் பல இளைஞர்கள், யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
2013 ஆம் ஆண்டில் பொதுமக்களினால் நீதிமன்றத்திற்கு அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் மாந்தை கெபிக்கு அருகாமையில் திருக்கேஸ்வரத்திற்கு போகும் பாதையின் அருகே மனித எச்ச புதைகுழிகள் காணப்படுவதாக நீதிமன்ற உத்தரவின்பேரில் அகழ்வு செய்யப்பட்டது.
இவ்வகழ்வின்போது 83 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அத்துடன் மேலதிகமான எலும்புக்கூடுகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டும் புதைகுழி தோண்டும் நடவடிக்கை நிறுத்தப்பட்டு தோண்டி எடுக்கப்பட்ட எலும்புகள் பிசோதனைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இச்செயல்பாடுகள் யாவும் ஈற்றில் நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டது. ஆனால் இன்று வரை தொடர் நடவடிக்கை எடுக்க மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதிலும் இந்நடவடிக்கை அரசின் அச்சுறுத்தல் காரணமாக காலதாமதமாகிக்கொண்டு வருகின்றது. இச்செயல்பாடுகள் பல காலமாக தொடரப்படாமல் இருந்து வருகின்றது.
அத்துடன் மன்னாரில் பழைய பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக புதிதாக சதொச நிறுவனத்தை அமைப்பதற்கு கிடங்கு தோண்டப்பட்ட போது அக்கிடங்கு தோண்டப்பட்ட இடத்திலும 350 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகளும் எச்சங்களும் காணப்பட்டன.
அக்கிடங்கை தொடர்ந்து தோண்டுவதற்கு நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அரசின் கெடுபிடி காரணமாக இச்செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டது. இதில் போர்க்கால சூழலில் காணாமல் ஆக்கப்பட்டோர் அக்காலத்தில் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இது தொடர்பான நீதியான நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்று அரசையும் நீதி மன்றத்தையும் கோரி நிற்கின்றோம்.
12. .போக்குவரத்து வீதிகள்
50 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்ட ஏ , பி , சீ , டீ தரவீதிகள் திருத்தப்படாமலும், புதிதாக அமைக்கப்படாமலும் இருந்;து வருகின்றன.
மன்னார் - மதவாச்சி வீதி சர்வதேசத்தை தொடர்புபடுத்தும் வீதியாக (ஏ14) காணப்பட்டாலும் இது முறைப்படி ஏ தரத்திற்கு ஏ தர வீதியாக அமைக்கப்படாமலும், திருத்தப்பட்ட பகுதிகள் பூரணப்படுத்தப்படாமலும் காணப்படுகின்றன. எனவே மேற்குறிப்பிட்ட வீதிகளை உடன் புனரமைப்பு செய்து தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்
13..மாற்றுதிறன்னாளிகளுக்கான அடிப்படை வசதி இன்மை
மாற்றுதிறன்னாளிகளுக்கான அடிப்படை வசதி இன்மை அரச மற்றும் பொது கட்டங்களில் மாற்றுதிறன்னாளிகளுக்கான நடைபாதை மற்றும் கழிவறைகள் வசதி, பராமரிப்பு நடைமுறை ஓழுங்காக செயற்படுத்தப்படாமை.
14 .காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி இற்றவரை கிடைக்காமை
இறுதி யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் ஆகியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்காமையும் மற்றும் இலங்கை அரசாங்கம் இறப்புசான்றுதல் வழங்கியும் வருகின்றார்கள். அவர்களுக்கு சரியான நீதி கிடைக்கவேன்டும். அவர்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேன்டும் என மன்னார் பிரiஐகள் குழு இவ்வாறன கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)