
posted 12th February 2023
“தியாகிகளை நினைவுகூருவோம். அவர்தம் உறவுகளைக் கௌரவிப்போம்” எனும் தலைப்பில், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) வருடாந்தம் நடத்திவரும் நிகழ்வு, கடந்த சனிக்கிழமை (11) மண்டூரில் நடைபெற்றது.
ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூர்ந்தும், அவர் தம் உறவுகளை நினைவு கூர்ந்தும், உறவுகளைக் கௌரவித்து உணர்வு பூர்வமாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
கிழக்கிலங்கை மண்டூர் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பாளர் தோழர் க. சின்னத் துரை தலைமையில், மண்டூர் சிறீ இராம கிருஷ்ண கலாச்சார மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு – அம்பாறை பிராந்திய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டுக் குழுவினால் மண்டூர் வலய ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பெருமளவிலான தியாகிகளின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், பிரதேச முக்கியஸ்த்தர்கள் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உயர்பீட உறுப்பினர் தோழர் சர்மாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில்,
காரைதீவு அறங்காவலர் ஒன்றியத் தலைவரும், காரைதீவு கண்ணகியம்மன் ஆலய தர்மகத்தாவுமான இரா. குணசிங்கம், தியாகி தோழர் பிராரனின் சகோதரி திருமதி. இ. கலாதேவி, தோழர் மதன் ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றினர்.
அத்துடன் சமாதான நீதவான் வல்லிபுரம் இராசலெட்சுமி, கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் திருக்குமரன், தோழர் ஜெயா, வரதன், தாஸ், சற்குணம், நகுலன் உட்பட சங்கர் புர முன்பள்ளி ஆசிரியைகளும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற நிகழ்வில் மறைந்த கட்சியின் செயலாளர் தியாகி தோழர் க. பத்மநாபாவின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மறைந்த தியாகிகளுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மேலும் தியாகிகளை நினைவுகூரும் முகமாக உருவப்படங்கள் வைக்கப்பட்டு உறவுகளால் விளக்கேற்றியும் வைக்கப்பட்டதுடன், தியாகிகளின் உறவுகள் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)