
posted 2nd February 2023
உள்ளூராட்சி மன்றங்களை கலைக்காமல் தேர்தல் நடாத்துவது பாரிய ஊழலுக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும் வழி வகுக்கிறது என்பதால் உள்ளூராட்சி மன்றங்களை அதற்குரிய அமைச்சர் கலைத்துவிட வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரசின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் ஊழல், துஷ்பிரயோகமற்ற தேர்தலை நடாத்துவதில் தேர்தல் திணைக்களம் மிகச்சிறந்த முறையில் செயல்படுகிறது. அந்த வகையில் அரசாங்கத்தின் சொத்துக்கள், கட்சிகள், சுயேற்சைகளின் தேர்தல் பணிக்காக பயன்படுத்துவதை தேர்தல் ஆணைக்குழு தடைசெய்துள்ளது.
ஆனாலும் உள்ளூராட்சி மன்றங்கள் இன்னமும் கலைக்கப்படாததால் உள்ளூராட்சி மன்றங்களும் அவற்றின் இடங்கள், வாகனங்கள் என்பனவும் அரச சொத்துக்கள் என்பதால் அவை தேர்தல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படும் செய்திகளை இந்த தேர்தல் காலத்தில் அறிகிறோம்.
தற்போது உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள மேயர்களும், தவிசாளர்களும், உறுப்பினர்களும் இம்முறையும் வேட்பாளர்களாக போட்டியிடுவதால் அவர்கள் தமது தேர்தல் பிரச்சாரங்களுக்கு தமக்குரிய அரச வாகனங்களிலேயே பயணிக்கின்றனர்.
அது மட்டுமல்லாது சில மேயர்கள் தேர்தல் சம்பந்தமான தமது கட்சி கூட்டங்கள், ஊடக மாநாடுகளை மாநகர கட்டிடத்தில் செய்வதன் மூலம் மிகப்பெரும் அத்துமீறல்களை புரிகின்றனர்.
ஆகவே தேர்தல் துஷ்பிரயோகங்களுக்கு அரச சொத்துக்களும், உறுப்பினர்கள் என்ற அந்தஸ்த்தையும் பாவிக்காமல் தடுக்க வேண்டுமாயின் உடனடியாக உள்ளூராட்சி மன்றங்களை கலைப்பதன் ஊடாகவே நேர்மையான தேர்தலை நாம் காண முடியும்.
இது விடயத்தில் உள்ளூராட்சி அமைச்சர் கவனமெடுக்க வேண்டும் எனவும், இதற்கான அழுத்தத்தை தேர்தல் கண்கானிப்பு நிறுவனங்கள் அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)