நிந்தவூரில் சுதந்திர தின நிகழ்வுகள்

இலங்கையின் சுதந்திரத்திற்காக பெரும்பான்மை சிங்களத்தலைவர்களுடன், தமிழ், முஸ்லிம் தலைவர்களும் இணைந்து குறைவில்லாப் பங்களிப்புச் செய்தமையை எவரும் மறுத்தலித்து விட முடியாது. அவர்களது தியாகங்கள் சுதந்திர தினத்தில் நினைவு கூரப்படுவதும் முக்கியமானதாகும்.
இவ்வாறு, நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் கூறினார்.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இலங்கையின் 75 வது சுதந்திர தின நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதேச செயலாளரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம்

இசைக்கப்பட்டதுடன், நாட்டுக்காக உயிர் நீத்தவர்கள் மற்றும் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக இரு நிமிடமௌனமும் அனுஷ்டிக்கப்பட்டது.

பிரதேச செயலக சகல உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் பங்கு கொண்ட இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜெஸான் வரவேற்புரையும், நன்றியுரையும் ஆற்றினார்.

நிகழ்வில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லத்தீப் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“இன்று 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில் எமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த தமிழ், முஸ்லிம், சிங்கள தியாகிகளை நினைவு கூர்வது அவசியமாகும்.

இந்த வகையில் இலங்கையின் வரலாற்றை நோக்கினால் நாட்டின் மூவின மக்களும் சுதந்திரத்திற்காகத் தியாகத்துடன் போராடியுள்ளனர்.
இதன்படி அன்று நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய சிங்களத் தலைவர்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் தமிழ், முஸ்லிம் தலைரவர்களும் போராடியே நாம் சுதந்திரத்தைப் பெற்றோம் என்பதை வரலாறு சான்றுபகர்கின்றது.

அதேபோல் தேசியக் கொடி, தேசிய கீதம் என்பவற்றுக்கும் நாம் கௌரவமளிக்க வேண்டும்.

இதேவேளை சுதந்திரம் பெற்ற பின்பும் நாம் எதிர்நோக்கும் சவால்களை முக்கியகவனத்திற் கொள்ள வேண்டும்.

சுதந்திரத்திற்குப் பின்னர் சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகள் அடைந்துள்ள அபரிமித முன்னேற்றங்கள் அவர்களது கடின உழைப்பால் பெற்றபேறாகும்.

குறிப்பாக வினைத்திறன், செயற்திறன் மிக்க ஆட்சியும், வினைத்திறனான சேவைகளும் முக்கியமாகும்.

இந்த வகையில் கிராமிய மட்டங்களில் வழிகாட்டும் பிரதேச செயலகங்களின் பங்களிப்பு மிக முக்கியமாகும்.

இதற்கென அபிவிருத்தி இலக்குகள் தொடர்பாக நாம் அறிந்து செயற்பட வேண்டும். கொவிட் பரவலின்பின் நாட்டின் வறுமை ஒழிப்பு மிகச் சவாலான ஒன்றாக தாண்டவமாடுகின்றது.

எனவே, பிரதேச செயலகங்களின் வினைத்திறனான சேவைகள் மிகஅவசியமாகும். இதற்கென சம்பளம் பெறும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களாகவின்றி நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களது வறுமை ஒழிப்பிற்கும் எமது சேவைகளைத் தொடர வேண்டும்.

அடிப்படையான வறுமை சார்ந்த பிரச்சினைகளைப் பூர்த்தி செய்யும் விடயங்களில் உத்தியோகத்தர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
இலங்கையை வறுமையற்ற நாடாக மற்ற வேண்டுமென்ற இலக்கில் நமது பங்களிப்பு அவசியமாகும். இதற்காக இலங்கையர் என்ற கோஷத்துடன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்த கொள்கை அமுலாக்கத்திற்காக எம்மைத் தயார்ப்படுத்தும் நாளே இன்றைய சுதந்திர தினமாகும்” என்றார்.

பிரதேச சபையில்

இதேவேளை 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நிந்தவூர் பிரதேச சபையிலும் சிறப்பாக நடைபெற்றது.

தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சுதந்திர தின ஞாபகர்த்த மரநடுகையும் இடம்பெற்றது.

இளைஞர் சம்மேளனம்

மேலும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிந்தவூர் இளைஞர் கழக சம்மேளனம் சுதந்திர தின சிரமதானப் பணி ஒன்றை முன்னெடுத்தது.

இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம். பரீதின் வழிகாட்டுதலிலும், சம்மேளனத்தலைவர் எஸ்.எல்.எம். நாசிறூன் தலைமையிலும் இடம்பெற்ற இந்த சிரமதான நிகழ்வில் நிந்தவூர் கடற்கரைப் பிரதேசம் சுத்தம் செய்யப்பட்டது.

நிந்தவூரில் சுதந்திர தின நிகழ்வுகள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)