
posted 6th February 2023
நீண்டகாலமாக மன்னார் மாவட்டத்தில் சரியான முறையில் கால்நடை வளர்ப்போருக்கு மேய்ச்சல் நிலம் அடையாளப்படுத்தி கொடுக்காமையால் விவசாய நெற்செய்கை காலத்தில் கால்நடைகளை தகுந்த இடங்களுக்கு கொண்டு செல்லாமையால் விவசாயம் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமை (04) மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேசப் பகுதியில் அறுவடை நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வின்போது அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில்;
விவசாயச் செய்கையை முன்கூட்டியே செய்த விவசாயப் பயிர்கள் கால்நடைகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தார்கள்.
குறிப்பாக நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல கிராமங்களிலும் முருங்கன் குளத்தின் கீழ் உள்ள ஒலுமடு பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
முன்கூட்டியே வெள்ளாமை செய்ததில் தண்ணீர்ப் பற்றாக்குறை , நீரினால் ஏற்படக்கூடிய அழிவு , பசளைப் பாவனை குறைப்பு , போன்ற நிலைகள் காணப்பட்டாலும், கால்நடையால் ஏற்பட்ட அழிவு நீர் முகாமைத்துவத்தின் ஒழுங்கீனம் போன்றவை பாதகத்தன்மையாக காணப்படுவதால் நானாட்டான் பகுதி விவசாயிகள் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக கவலை தெரிவித்தார்கள்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)