தந்தை தாக்கியதில் சிறுவன் மரணம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குடா கிழக்கு பிர்தௌஸ் நகரைச் சேர்ந்த 11 வயதான சிறுவனை, வளர்ப்புத் தந்தை கடுமையாக தாக்கியதில் படுகாயங்களுக்கு உள்ளான சிறுவன் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளான்.

சிறுவனின் வளர்ப்புத் தந்தை காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் தாய் தனது கணவரை விவாகரத்து செய்த பின்னர் மாத்தளையைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்திருந்தார். இவர் திருமணம் செய்து ஒரு வருடமாகின்றது.

இந்த தாய்க்கு முதல் திருமணத்தில் மூன்று பிள்ளைகள் உள்ளனர். தனது புதிய கணவரிடம் தனது மூன்று பிள்ளைகளில் 11 வயதுடைய ஒரு மகனை கொடுத்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளார்.

ஏனைய இரண்டு பிள்கைளில் ஒரு பெண் பிள்ளை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு மகனை முன்னாள் கணவரும் அவரது குடும்பமும் பொறுப்பேற்று வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதிய கணவர் வளர்ப்பு மகனை கர்பலாவிலுள்ள வாடகை வீடொன்றில் வைத்து மிக கடுமையாக தாக்கியுள்ளார்.

படுகாயங்களுக்குள்ளான சிறுவன் மயக்கமடைந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

சிறுவன் விபத்தில் விழுந்ததாக கூறி வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் போலியான முகவரியொன்றையும் கொடுத்துள்ளார்.

சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுவனின் உடம்பில் தாக்கப்பட்ட பலத்த காயங்கள் காணப்பட்டதையடுத்து சந்தேகமுற்ற வைத்தியசாலை வைத்தியர் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு அறிவித்ததையடுத்து அங்கு விரைந்த சிறுவர் பிரிவு அதிகாரிகள் சிறுவனின் தந்தை மற்றும் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியதியதுடன் வைத்தியசாலை பொலிஸாருக்கும் இந்த விடயம் தெரியவந்தது.

இதையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் தந்தையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டார்.
சிறுவனை தாக்கியதை வளர்ப்பு தந்தை ஒப்புக் கொண்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான குறித்த வளர்ப்பு தந்தையை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.

தந்தை தாக்கியதில் சிறுவன் மரணம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)