சிவனடிபாத மலையை தரிசனம் செய்துவிட்டு திரும்பிய வயோதிபர் மரணம்

சிவனடிபாத மலைக்குச் தரிசனம் செய்துவிட்டு திரும்பிய வயோதிபர் திடீரென சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்று உயிர் இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது;

கல்கிசை பகுதியில் இருந்து சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த 89 வயதுடைய நிஷாந்த கல்தேரா என்ற வயோதிபர் சிவனடிபாத மலையை தரிசனம் செய்துவிட்டு வியாழக்கிழமை (02) அதிகாலைவேளையில் திரும்பிக் கொண்டு இருந்த வேளையில் ரத்து அம்பலம என்ற இடத்தில் திடீரென கடும் சுகவீனமுற்றுள்ளார்.

இதை அறிந்த நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொலிசார் சுகவீனமுற்ற இவ் வயோதிபரை உடனே ஒரு அம்புலன்ஸ்

வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவரை இவ் வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணத்தை தழுவிக் கொண்டார்.

இறந்தவரின் சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டு உள்ளது எனவும், பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது சடலம் அவரது உறவினர்கள் எடுத்து செல்ல உள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் குளிரும், மழையும் அத்துடன் பணி மூட்டமும் அதிகளவு காணப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவனடிபாத மலையை தரிசனம் செய்துவிட்டு திரும்பிய வயோதிபர் மரணம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)