
posted 13th February 2023
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான முடியப்பு ரெமீடியஸ் நேற்றுசனி காலமானார்.
கடந்த 8ஆம் திகதி பருத்தித்துறை வீதி, சிறுப்பிட்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த சட்டத்தரணி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மூளையில் ஏற்பட்ட கடுமையான சிதைவு மற்றும் இரத்தக் கசிவுகள் மூளையின் செயற்பாடுகளை கடுமையாக பாதித்ததன் விளைவாக சத்திர சிகிச்சை மற்றும் அதிதீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோதும் அது பலனளிக்கவில்லை.
சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, நாய் குறுக்கே ஓடியதால் அவர் விபத்துக்குள்ளாகியிருந்தார். மேலும், அவர் அணிந்து வந்த தலைக்கவசம் கழன்றமையினால் அவரின் தலையில் ஏற்பட்ட காயம் பலமாக இருந்ததாக கூறப்படுகின்றது.
அவர் விபத்துக்குள்ளான இடத்தில் மற்றொரு தலைக்கவசம் காணப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி யாழ். நீதிமன்ற பதில் நீதிவான் பா.தவபாலன் உத்தரவிட்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)