
posted 12th February 2023
சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு எதிராக யாழ். நகரில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரையும் தலா மூன்று இலட்சம் பெறுமதியான இரண்டு ஆள்பிணையில் செல்ல யாழ்ப்பாண பதில் நீதிவான் அனுமதித்தார்.
சனிக்கிழமை (11) இரவு 11மணியளவில் நீதவானின் வாசஸ்தலத்தில் 18 பேரையும் பொலிஸார் முற்படுத்தியபோதே பதில் நீதிவான் இந்த உத்தரவையிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு எதிராக யாழ். நகரில் போராட்டம் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் போராட்டங்கள், பேரணிகள் நடத்துவதை தடுப்பதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிஸார் தடை உத்தரவு பெற்றிருந்தனர்.
எனினும், தடை உத்தரவை மீறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்ப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டத்தை தடுக்க முயற்சிக்கப்பட்டதுடன் 18 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)