குட்டிச்சுவரான நாட்டைக் கட்டியெழுப்புவோம் - அனுர

“பழமைவாத அரசியலைப் புறந்தள்ளி நாட்டைப் புதிய பாதையில் கட்டியெழுப்ப வேண்டிய நிலையிலுள்ளோம். மாறி, மாறி வந்த ஆட்சியினரெல்லாம் நாட்டை நாசமாக்கி குட்டிச்சுவரான நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸா நாயக்க கூறினார்.

கிழக்கு மாகாணம் - சாய்ந்தமருதில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், கல்முனைத் தொகுதி

அமைப்பாளருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் “மக்கள் சந்திப்பு” எனும் தலைப்பில் இக்கூட்டம் நடைபெற்றது. தலைவர் அனுர குமார திஸா நாயக்க தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“இந்த நாட்டை சுயநல அரசியலுக்காக, இனவாத, மதவாத செயற்பாடுகள் மூலமும், லஞ்சம், ஊழல் மற்றும் குறுகிய நோக்கங்குளுடனும் செயற்பட்டு சின்னாபின்னமாக்கியுள்ளடன், பெரும் வங்குரோத்து நிலைக்கும் ஆட்சியாளர்கள் கொண்டு வந்துள்ளனர். இதனால் நம்வருங்கால சந்ததியினரதும், இளைஞர்களதும் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையிலுள்ளது.

எனவே, அனைத்து பிரஜைகளும் நிம்மதியாகவும், சுபீட்சத்துடனும் வாழத்தக்க மகிழச்சியான தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
இந்தப்பாதையில் மக்களுக்கான சரியான திசைகாட்டியாக தேசிய மக்கள் சக்தி, மக்களையும் இணைத்துக் கொண்டு பயணிக்கின்றது.

புனித நோன்பு காலம் வந்தால் உண்மையான வருமானம் கொண்ட முஸ்லிம் மக்கள், தமது நேர்மையான வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு பங்கை ஏழைகளுக்கு ஸகாத்தாக வழங்குவார்கள்.

ஆனால் தேர்தல் காலம் வந்தால் இன்றைய அரசியல் வாதிகள் என்ன செய்கின்றார்கள்?

பணம் என்றும், பொதிகள் என்றும் வேறு பொருட்களென்றும் வாக்குகளைப் பெறுவதற்காக வாரிஇறைக்கிறார்கள். இதற்கான பணம் எங்கிருந்து வந்தது? எப்படியான உழைப்பில் கிடைத்தது? என்பதை நாம் உணர வேண்டும்.

எல்லாமே ஊழல், மோசடி, குறுக்கு வழியிலான மோசடிக்கொந்தராத்துக்கள் மூலம் கிடைத்த பணமே அவை.

மக்களைச் சுரண்டி வாழும், மக்கள் வரிப்பணத்தில் சுரண்டி, நாட்டையே நாசமாக்கிய மோசடிப் பேர்வழிகளே இவர்கள்.

இத்தகைய அரசியலை தேசிய மக்கள் சக்தி ஒரு போதும் முன்னெடுக்காது. இத்தகைய ஊழல் மோசடிப் பேர்வழிகளிடமிருந்து மக்கள் பணத்தை மீட்டெடுத்து, உரிய நடவடிக்கைகளுக்கு அவர்களை உட்படுத்தும் நோக்கே எமது பயணமாகும்.

நாம் நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய மாற்றத்தை உருவாக்கும் பாதையில் பயணிக்கின்றோம்” என்றார்.

குட்டிச்சுவரான நாட்டைக் கட்டியெழுப்புவோம் - அனுர

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)