கலாசார மண்டபம்

“தமிழர்களின் மண்ணில் தமிழருக்காக இந்திய அரசாங்கத்தால் கட்டிக்கொடுக்கப்பட்ட கலாசார மண்டபத்தைத் தமிழர்களிடம் கையளிக்க வேண்டும். அதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”- இவ்வாறு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே. அண்ணாமலையிடம் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார் ஆறு. திருமுருகன்.

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் யாழ். கம்பன் விழா நேற்று (10) நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்துக்கு நேற்று முன்தினம் (09) வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை நேற்று (10) இந்த நிகழ்வில் பங்கேற்றார். மக்கள் நிறைந்திருந்த இந்த அரங்கின் மேடையிலேயே ஆறு. திருமுருகன் இந்தக் பகிரங்கக் கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு,

“சொல்லெணா துன்பங்களை அனுபவித்த தமிழினம் தன் மொழியை - பண்பாட்டை - அடையாளங்களை தொலைத்து விடாமல் இவ்வாறான தமிழ் சார்ந்த விழாக்களை தொடர்ந்தும் நடத்தி வருகிறது.

அப்படியான விழாக்களில் ஒன்றான கம்பன் விழாவில் இந்தியாவின் இளம் தமிழ் அரசியல்வாதியான அண்ணாமலை திடீரென கலந்து கொண்டமை எமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

“இந்த சந்தர்ப்பத்தில் அண்ணாமலையிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். தமிழர்களின் மண்ணில் தமிழர்களுக்காக இந்திய அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தை தமிழர்களிடம் கையளிக்க வேண்டும் அதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்று கூறினார்.

இதேசமயம், யாழ்ப்பாணம் கலாசார மையம் யாழ். மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழேயே கையளிக்கப்படும் என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால், மத்திய அரசாங்கம் அதனை மாநகர சபையிடம் வழங்காதிருக்க பல முயற்சிகளை எடுத்துள்ளது. இதனிடையே, இன்றைய நிகழ்வில்கூட யாழ். மாநகர சபை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையிலேயே ஆறு. திருமுருகன் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கலாசார மண்டபம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)