
posted 1st February 2023
இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சமஷ்டி என்றில்லாமல் ஒற்றையாட்சியின் கீழ் அதிகார பரவலாக்கம் செய்ய தயார் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் நிலைப்பாட்டை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் கல்முனை காரியாலயத்தில் வைத்து ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீண்ட கால பிரச்சினையான இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனாலும் நமது நாடு சிறிய நாடு என்பதால் சமஷ்டி ஆட்சி என்பது நாட்டுக்கு பொருத்தமற்றதாகும். இதனை ஜனாதிபதி அவர்களும் சமஷ்டிக்கு நான் அனுமதிக்க மாட்டேன் என அழுத்தம் திருத்தமாக சொல்லியுள்ளார்.
ஒற்றை ஆட்சிக்குள் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்தையே எமது கட்சியும் கொண்டுள்ளது.
மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கும் போது ஒன்பது மாகாணங்களுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதனை விடுத்து வடக்கையும், கிழக்கையும் இணைத்து அதிகாரம் வழங்குவதை நாம் ஏற்க மாட்டோம்.
அதே போல் அரசாங்கத்தின் இத்தகைய தீர்வு முயற்சிக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒருமித்து தீர்வு பெற முயற்சிக்க வேண்டும். அரசாங்கத்தில் பதிவு பெற்றுள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் முதலில் ஒன்றாக உட்கார்ந்து தமக்கான தீர்வு என்ன என்பதை இனம் காண வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன் வைக்கிறோம் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)