
posted 2nd February 2023
கொழும்பு தெஹிவளையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிர் நீத்த கிளிநொச்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர் எஸ்.என். நிபோஜனின் மறைவு குறித்து தென்கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் அனுதாபம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் இணைச் செயலாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான செல்லையா பேரின்பராசா, சங்கம் சார்பில் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில், நிபோஜனின் இழப்பு தமிழ் ஊடக குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகுமெனவும் தெரிவித்துள்ளார்.
முப்பது வயதுடைய துடிப்பு மிக்க இளம் ஊடகவியலாளரான நிபோஜன், சிறந்த புகைப் படக் கலைஞராகத் திகழ்ந்ததுடன்,
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டங்களுட்பட
கிளிநொச்சி மாவட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் கனதியான செய்தி அறிக்கைகளை வெளிச்சம் போட்டுக்காட்டி ஊடக தர்மத்தை நிலைநாட்டி வந்தவரெனவும், இந்த அறிக்கையில் இணைச் செயலாளர் செல்லையா பேரின்பராசா தெரிவித்துள்ளார்.
சங்கம் சார்பிலான ஆழ்ந்த அனுதாபங்களை மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் தெரிவிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது தெஹிவளையில் தவறிவிழுந்து உயிரிழந்த ஊடகவியலாளர் நிபோஜனுக்கு மட்டக்களப்பிலும் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு ஊடக மையம் என்பன இணைந்து ஊடகமையத்தில் நிபோஜனின் உருவப்படம் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)