
posted 21st February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
யுத்தக்காலத்தைப் போன்று மன்னாரில் எட்டு இராணுவ சோதனை சாவடிகள் தொடர்ந்து காணப்படுகின்றன. மன்னார் பாலத்தில் பொது மக்கள் மாலைவேளையில் ஓய்வுக்காகவும் , உடற்பயிற்சிக்காகவும் பாவித்து வந்த இடத்தை இராணுவம் சோதனை சாவடிக்காக கைப்பற்றியுள்ளதால் மக்கள் அசௌரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடம் மன்னார் பிரஜைகள் குழுவினர் சுட்டிக்காட்டினர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த சனிக்கிழமை (18) சுப்பிரிங் கோட் ஓய்வுநிலை நீதிபதியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவியுமான திருமதி றோகினி மாரசிங்க தலைமையிலான குழு மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தது.
இக்குழுவானது மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் கொண்ட மன்னார் பிரஜைகள் குழு பணிப்பாளர் சபையின் பிரதிநிதிகளை சந்தித்தது.
இவ்விரு குழுக்களும் மன்னார் நகர சபை கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது மூன்று முக்கிய விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடினர்.
அதாவது மன்னாரில் தொடர்ந்து இராணுவ சோதனை சாவடிகளை அமைத்து பிரயாணங்களின் போது ஆண்கள், பெண்கள் என இராணுவத்தினரால் சோதனைக்கு உட்பட்டு வருகின்றனர் எனவும், வேறு மாவட்டங்களில் இல்லாத நடைமுறை மன்னாரில் மீனவர்கள் இன்னும் கடற்தொழிலுக்குச் செல்லும் போது தங்கள் மீனவ அடையாள அட்டைகளை கடற்கரையிலுள்ள கடற்படையினரிடம் காண்பித்த பின்பே மீன்பிடிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் எனவும், அத்துடன் இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் திருமதி றோகினி மாரசிங்க தெரிவிக்கையில்;
மன்னாரில் பிரயாணிகள் ஆண்கள், பெண்கள் உடல் ரீதியாக இராணுவத்தினரால் சோதனைகளுக்கு உடபடுத்தப்பட்டு வருவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இது தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவாகிய உங்களின் அபிப்பிராயங்களை பெறவேண்டியுள்ளது.
சட்ட ரீதியாக நாம் பார்க்கும்போது இராணுவம் எம்பொழுதும் பொலிஸூக்கு உதவியாகத்தான் இருக்க வேண்டும்.
ஆனால் சோதனை சாவடிகளில் அதிகமான இராணுவத்தினரும் ஓரிரு பொலிசாருமே இருப்தையும் அவதானிக்க முடிகின்றது எனவும் எமக்கு முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளது என தெரிவித்தார்.
இதன்போது அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் மற்றும் கலந்து கொண்ட பிரஜைகள் குழு பணிப்பாளர் சபையினர் இங்குள்ள சோதனை சாவடி தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கையில்;
மன்னார் பாலத்தடியில் இராணுவம் யுத்தக்காலத்தில் பிரயாணிகளை சோதனையிடுவதுபோல் வாகனங்கள் மற்றும் பிரயாணிகளை சோதனையிட்டு வருகின்றனர்.
மன்னார் நகரில் வசிப்போர் இந்த பாலத்தடியில் பிற்பகலில் ஓய்வு எடுப்பதிலும் பலர் இவ்விடத்தில் உடற்பயிற்சி எடுக்கும் ஒரு இடமாக இருக்கின்றபோதும், இந்த இடத்தை இந்த நோக்கத்துக்காக புனரமைக்க நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டபோதும் இராணுவத்தினர் இவ்விடத்தை தனதாக்கிக் கொண்டிருப்பதால் இந்நிதியும் திரும்பிச் சென்றுள்ளது எனவும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டது.
இது தொடர்பாக நாங்கள் இராணுவத்தினருடன் கலந்துரையாடப்பட்ட போது அவர்கள் போதைப் பொருட்களை கடத்தலை தடுக்கவே இவ்வாறு சோதனை சாவடிகளை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்து வருகின்றனர்.
தென் பகுதியில் போதைப் பொருட்கள் கடத்தல் இல்லையா? அங்கு இவ்வாறான சோதனைகள் இடம்பெறுகின்றதா? என்ற கேள்விகள் தொடுக்கப்பட்டதுடன், கடலில் பலத்த பாதுகாப்பு இருக்கின்றபோதும் மன்னாரில் யார் முக்கிய கடத்தல்காரர் என பாதுகாப்பினருக்கு தெரிந்திருக்கின்றபோதும் இவர்களை தடுக்க முடியாத பாதுகாப்பனர் ஏன் அப்பாவிகளுக்கு தொல்லை கொடுக்கின்றனர்
மன்னார் மாவட்டத்தில் இன்னும் யுத்தக்காலத்தைப்போன்று எட்டு இராணுவ சோதனை சாவடிகள் காணப்படுகின்றன. அதாவது குஞ்சுக்குளம் , பறையநாளன்குளம் , மறிச்சுக்கட்டி , வங்காலை , ஆண்டாங்குளம் , மன்னார் பாலம் , தாராபுரம் , மன்னார் சங்குப்பிட்டி வீதி ஆகியவற்றில் இராணுவ சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)