
posted 5th February 2023
இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த பகுதியிலிருந்து சுமார் 108 ஏக்கர் காணிகள் வெள்ளிக்கிழமை (03) விடுவிக்கப்பட்டன.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டே நேற்றைய (04) தினம் இந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டன.
காணிகளை விடுவிக்கும் சம்பிரதாய பூர்வ நிகழ்வு நேற்று (04) பலாலி அன்ரனிபுரத்தில் நடைபெற்றது. இதில், யாழ். மாவட்ட படைகளின் கட்டளை தளபதி மேஜா் ஜெனரல் சுவா்ண போதோட்ட யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரனிடம் அதற்கான ஆவணத்தைக் கையளித்தார்.
இராணுவத்தின் பிடியிலிருந்த 80 ஏக்கர் காணிகளும் கடற்படையின் ஆதிக்கத்திலிருந்த 28 ஏக்கர் காணிகளுமாக 108 ஏக்கர் காணிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டன. காங்கேசன்துறை – மத்தி (ஜே 234) – 50.59 ஏக்கா், மயிலிட்டி – வடக்கு (ஜே 246) - 16.55 ஏக்கர், தென்மயிலை (ஜே 240) – 0.72 ஏக்கர், பலாலி – வடக்கு (ஜே 254) – 13.033 ஏக்கர், நகுலேஸ்வரம் (ஜே 226) -28 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.
விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றத்துக்காக 130 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளன.
இதேசமயம், விடுவிக்கப்பட்ட காணிகளில் 13 ஏக்கர் அரச காணியாகும். இந்த காணி வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 5 இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் 75 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
அத்துடன், மீள்குடியேறும் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் காணிகளை துப்புரவு செய்வதற்கு நிதியுதவி அளிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் காணி விடுவிப்பு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினா்களான எம். ஏ. சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், வட மாகாண சபை அவைத்தலைவா் சீ. வி. கே. சிவஞானம், மற்றும் ஜனாதிபதியின் செயலாளா் இ.இளங்கோவன், வடக்கு பிரதம செயலாளர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள், படை அதிகாரிகள் எனப் பலர் பங்கேற்றிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)