
posted 15th February 2023
கிழக்கு மாகாணத்தில் அரச நிதி வீண்விரயம் செய்யப்படுகின்றது. நாடு தற்போதுள்ள நிலையில் இதனைத் தவிர்த்தால் பல இலட்சம் ரூபாய்களை மாதாந்தம் மீதப்படுத்த முடியும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
குறிஞ்சாக்கேணிப் பகுதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
அரசாங்கம் நிதி நெருக்கடியில் உள்ளதாக ஜனாதிபதியும், ஏனையோரும் கூறி வருகின்றபோதிலும் அவர்களே நிதி வீண் விரயங்களும் செய்து வருகின்றனர். இப்படி இருந்தால் எப்படி நாட்டை முன்னேற்ற முடியும் எனக் கேட்க விரும்புகின்றேன்?
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு மீள் நியமனமோ சேவை நீடிப்போ வழங்குவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கின்றபோதிலும் கிழக்கு மாகாணத்தில் ஓய்வுபெற்ற பிரதிப் பிரதம செயலாளர் ஒருவருக்கு இம்மாகாண ஆளுநர் சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.
இந்தப் பதவிக்கு பொருத்தமானவர்கள் கிழக்கு மாகாண அரச சேவையில் இருக்கின்ற போதிலும் தனது சுயநலம் கருதி ஆளுநர் இந்த சேவை நீடிப்பை வழங்கியுள்ளார்.
உயர் அதிகாரிகளின் பதவி தொடர்பான சகல விடயங்களும் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்குரியது. பொதுச்சேவை ஆணைக்குழு செய்யவேண்டிய பணியை இப்போது ஆளுநர் செய்கின்றார். இந்த அரசாங்கத்தினால் பொதுச் சேவை ஆணைக்குழுவின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளதா? அல்லது அங்கும் அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.
கிழக்கு மாகாணக் கல்விப் பகுதியில் ஓய்வுபெற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஓய்வூதியமும் பெற்று மாதச் சம்பளமும் பெற்று வருகின்றனர். தகுதியானவர்களுக்கு பொருத்தமான இடமாற்றங்களை வழங்கி ஓய்வு பெற்றவர்களை வீட்டுக்கு அனுப்பினால் பெருந்தொகையை மீதப்படுத்தலாம்.
கிழக்கு மாகாணசபையில் உள்ள வீடமைப்பு அதிகாரசபை மாகாண மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்ததை விட தவிசாளரும், பணிப்பாளர் சபையினரும் ஏனையோரும் பெறும் கொடுப்பனவுகளே அதிகமாகும். இந்த வீண்விரயம் குறித்து ஏன் கவனம் செலுத்தவில்லை?
அதேபோல சுற்றுலா அதிகார சபை மூலம் மாகாண சபை பெற்ற வருமானம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அங்கு தவிசாளரும், பணிப்பாளர் சபையினரும் ஏனையோரும் மாதாந்தம் சம்பளம் பெறுகின்றனர்.
இது கிழக்கு மாகாணத்தில் உள்ள நிதி வீண்விரயங்களுக்கு உதாரணம். இதுபோல ஏனைய மாகாணங்களிலும், மத்திய அரசிலும் உள்ளன. இது போன்ற வீண்விரங்களை அரசு குறைத்து மக்களின் சுமைகளைக் குறைக்க முடியும்.
ஆனால் அரசாங்கம் இப்படியான வீண்விரயங்களைக் குறைக்காது. ஏனெனில் இதன் மூலம் நன்மை பெறுபவர்கள் அரசிலுள்ள முக்கியஸ்தர்களுக்கு வேண்டப்பட்டவர்கள். இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வதென்ன? மக்கள் எப்படி கஸ்டப்பட்டாலும் தான் சார்ந்தவர்கள் மட்டும் நன்மையடைய வேண்டும் என்ற கொள்கையை இந்த அரசிலுள்ளவர்கள் பின்பற்றுவதாகும்.
எனவே, மக்களைக் கஸ்டப்படுத்தி தான் சார்ந்தவர்களுக்கு பயன்பெற்றுக் கொடுக்கும் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கணுப்ப அனைவரும் இந்த தேர்தலில் அரசாங்கத்தக்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என்றார்.
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)