
posted 1st February 2023
எமது அழகிய நாடு சீரழிவதற்கு ரணில் - ராஜபக்ஷ கூட்டுக் கம்பனியே காரணம்.
இவ்வாறு திருக்கோயில் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எனது தந்தையார் ரணசிங்க பிரேமதாஸ உருவாக்கிய தம்பட்டை ஆடைத் தொழிற்சாலை மீள திறக்கப்படும். இளைஞர்கள் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வெ. வினோகாந்த் தலைமையில் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.
அங்கு அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அனைத்து சபைகளையும் கைப்பற்றி வரலாறு படைக்க இருக்கிறது.
இன்னும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க எத்தனிக்கும் ரணில் - ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற மறுத்து இந்த நாட்டை பொருளாதார ரீதியிலே பின்னடைய செய்வதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை .
எனவே ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்று திரளவேண்டும். ரெலிபோன் சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் நாங்கள் இலங்கையை வளமான நாடாக கட்டி எழுப்ப எல்லாம் மூச்சுகளையும் மேற்கொள்வோம்.
எனவே கிழக்கு மாகாணத்தில் காணப்படக்கூடிய தமிழ் பிரதேசங்களான திருக்கோவில், ஆலடிவேம்பு, காரைதீவு, நாவிதன்வெளி போன்ற பகுதிகளில் காணப்படக்கூடிய மக்களின் அன்றாட வாழ்க்கையை உயர்த்துவதற்கு எல்லா விதத்திலும் அத்தனை முயற்சிகளையும் எடுப்பது சஜித் பிரேமதாஸ என்பதனை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
லஞ்சம், ஊழல், ஜாதி, இனம், மதங்கள் அகியவற்றை மையப்படுத்திய அரசியல்வாதிகளை இனிமேல் நாங்கள் கூண்டோடு ஒழித்து விட வேண்டும். இனி ஒருபோதும் அப்படியானவர்களுக்கு நாங்கள் வாய்ப்பு அளிக்கக்கூடாது என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம தாச அக்கறைப்பற்று, காத்தான்குடி முதலான பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் உரையாற்றினார்.
இக் கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)