
posted 22nd February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஜப்பான் அரசு மற்றும் மக்களின் நிதி பங்களிப்புடன் நிறுவனத்தினால் கண்ணிவெடியகற்றல் பணி மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சமூக நல்லிணக்கத்திற்கான டெல்வன (டாஸ்) நிறுவனமானது ஒரு அரச சார்பற்ற கண்ணிவெடியகற்றும் மனிதாபிமான பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அவுஸ்ரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளின் நிதியுதவியுடன் கண்ணிவெடியகற்றும் பணியை முன்னெடுத்து வருகின்றது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் மக்களை குடியேற்ற முடியாத பகுதிகளாக அடையாளம் காணப்பட்டதும், வெடி பொருள் அச்சுறுத்தல் மிக்கதுமான பகுதிகளை பாதுகாப்பான பகுதிகளாக அடையாளப்படுத்தும் பணிகளை முன்னெடுத்த வருகின்றது. ஜப்பானிய அரசாங்கம், அமேரிக்கா, அவுஸ்ரேலியா, ஜேர்மனி குடியரசு மற்றும் சுவிஸ்லாந்தின் கண்ணிவெடியற்ற உலகத்திற்கான அறக்கட்டளை என்பனவற்றின் நிதியுதவியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஏறத்தாள 433 பேர்களுடன் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அப்பணிக்கு மேலதிகமாக வெடிப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் சம்பந்தமான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அவர்களை பாதுகாப்புடன் இருக்கவும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறன.
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் இருபாலரும் மற்றைய இனத்தவர்களுடன் இணைந்து களநிலை ஊழியர்களாக உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், வறுமைகோட்டின் கீழ் வாழும் குடும்பங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக பெண் ஊழியர்கள், விதவை மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
2010 ஆம் ஆண்டிலிருந்து கண்ணிவெடியகற்றும் பணியை டாஸ் நிறுவனமானது வடமாகாணத்தில் முன்னெடுத்து வருகின்றது. இதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்கு பெரிதும் உதவி புரிந்து வருகிறது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்போதும் இக்கண்ணிவெடியகற்றும் கடினமான பணிமூலம் 15.5 சதுர கிலோமீற்றர் கண்ணிவெடி அகற்றப்பட பிரதேசமாக அடையாளப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் குறித்த நிறுவனத்தினால் கையளிக்கப்பட்ட இடங்களாக கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகம், வயல்நிலங்கள், ஆற்றங்கரைகள், பள்ளிக்கூட வளாகம், கோயில், ஆனையிரவு உப்புவயல்கள், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் கால்நடை மேய்ச்சல் நிலங்கள், போன்ற பகுதிகள் பாதுகாப்பாக அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை முகமாலை, மணலாறு, மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதியில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவற்றில் 357 இடங்கள் முழுமையாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன், மேலும் 13 இடங்களில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.
அத்தோடு 26 இடங்களில் வெடிக்காத வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், 110,058 தனிநபர் கண்ணிவெடிகள், 254 கனரகவாகன கண்ணிவெடிகள், 26,508 வெடிக்காத பொருட்கள், மற்றும் 168,141 சிறிய ஆயதங்களுக்கான பொருட்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் கணக்கிடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கான கொடைவழங்குனர்களில் ஜப்பான் அரசாங்கமும் முக்கியமான ஒன்றாகும். தாராள குணத்தையுடைய ஜப்பான் மக்களின் நிதியுதவியினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடியகற்றல் மற்றும் மனிதநேய செயற்பாட்டினால் நாட்டுக்கு பயன்கள் கிடைத்துள்ளது.
ஏறத்தாள 6.5 சதுர கிலோமீற்றா் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின உதவித் திட்டமானது 2010 ஆம் ஆண்டிலிருந்து கிடைத்துவரும் நிலையில், அத்திட்டத்தின் கீழ் பணியாளர்களிற்கான வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதுடன், மீள்குடியேற்றப்பட முடியாத பகுதிகளில் விரைவான மீள்குடியேற்றத்திற்கு உதவியாகவும் அமைந்துள்ளது.
குறித்த பணிக்காக கொடைகளை வழங்கும் ஜப்பான் நாட்டு அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களிற்கும் பயன்பெறும் மக்கள் நன்றிகூற கடமைப்பட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)