
posted 13th February 2023
வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்ற கொடுப்பனவுகள் ஜனாதிபதியின் தலைமையில் வழங்கப்பட்டன.
வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்றக் கொடுப்பனவாக தலா 38,000 ரூபா வீதம் வழங்கப்படும் காசோலைகள் என்பவற்றைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (12) முற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, யுத்தத்தின் போது பாதுகாப்பு
படையினரால் பயன்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை அதன் உரிமையாளர்களான பொது மக்களிடம் மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டன.
இதனடிப்படையில் காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் காசோலைகளை கையளிக்கும் அடையாள நிகழ்வு நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வட மாகாணத்துக்கான ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் எல். இளங்கோவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)