
posted 21st February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனையில் இப்போ
கோண்டாவில் பகுதியில், மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கோண்டாவில் பகுதியில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை மடக்கி சோதனை செய்தபோது , 750 கிராம் போதை கலந்த பாக்கு அவரிடமிருந்து மீட்கப்பட்டது.
இதையடுத்து சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கலாசார நிலையம் மாநகர சபையின் பொறுப்பாக வேண்டும்
யாழ்ப்பாண மத்திய கலாசார நிலையத்தை யாழ். மாநகர சபையிடமே கையளிக்க வேண்டும். அதற்கான அழுத்தங்களை இந்திய அரசாங்கத்துக்கு வழங்குவோம் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
சிவராத்திரியை முன்னிட்டு இலங்கையில் உள்ள பஞ்ச ஈச்சரங்களையும் தரிசிப்பதற்காக தமிழகத்தில் இருந்து இந்து மக்கள் கட்சியினர் வருகை தந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் (19) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா – இலங்கை இடையேயுள்ள உறவு புராண, இதிகாச வரலாற்றுச் சிறப்புமிக்க உறவு. இந்த உறவை மேம்படுத்த வேண்டும். இதற்காகத்தான் சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்க வேண்டும் என 10 வருடங்களாக வலியுறுத்தி வந்தார்.
இதேபோல் இத் திட்டம் எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. விமானப் போக்குவரத்தும் இரு நாடுகளுக்குமிடையே அண்மையில் ஆரம்பமாகியுள்ளது.
பாரதப் பிரதமர் மோடி யுத்தத்துக்கு பின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,000இற்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டிக் கொடுத்து நேரடியாக பால் காய்ச்சும் நிகழ்வில் பங்கெடுத்து, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த முதல் பாரதப் பிரதமர் என்ற தடத்தையும் பதித்திருந்தார்.
தற்போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உதவிகளை அனுப்பினார். அத்தோடு சமீபத்திலும் கலாசார மண்டபம் இந்தியா அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இந் நிலையிலே நாம் இரு நாட்டுக்கிடையேயுள்ள தொப்புள் கொடி உறவை மேம்படுத்த வேண்டும். பாரத நாடு எப்பொழுதும் இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்க நினைத்ததில்லை. உதவி செய்வதை தவிர, ஏனைய நாட்டின் உள்ளக விடயங்களில் தலையிடுவதில்லை.
இரு நாட்டிலுள்ள அரசியல்வாதிகள், மத வெறியர்கள் மற்றும் சதிகாரர்களை போன்றவர்களைப் புறந்தள்ளிவிட்டு இரு நாட்டு மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இலங்கை இந்தியாவுடன் பின்னிப்பிணைந்த நாடு. இது குபேரன், இராவணன் போன்றோர் ஆண்ட நாடு. தற்சமயம் இரு நாடுகளின் இராச்சியங்கள், அரசியல் மற்றும் அரசுகள் வேறுபட்டாலும் நாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்.
தற்போது இங்கு மோசடி, மத மாற்றம் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. உதாரணமாக திருக்கேதீச்சரத்தில் மதமாற்ற நடவடிக்கைகள் போன்றனவற்றை குறிப்பிடலாம். இவற்றுடன் ஈஸ்டர் குண்டு வெடிப்பு போன்ற மத பயங்கரவாதம் கடந்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றுள்ளதையும் குறிப்பிட முடியும்.
சீனா கட்டிக்கொடுத்த கலாசார மையத்தை தன் கட்டுப்பாட்டிலே வைத்திருக்கின்றது. மாறாக இந்திய அரசாங்கத்தால் கட்டிக்கொடுக்கப்பட்ட கலாசார மண்டபமானது இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த கலாசார மண்டபத்தை யாழ். மாநகர சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவும் காணப்படுகின்றது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார ரீதியான உறவுகளை மேம்படுத்த முடியும்.
திருக்கேதீச்சரத்தில் தோரணவாயில் அமைக்கப்பட வேண்டும். திருக்கோணேஸ்வரம், இராவண வரலாறு போன்றன மீளக் கட்டமைக்கப்பட வேண்டும். திருகோணேஸ்வர ஆலயம் தொடர்பாகவும் அங்கு தொல்லியல் திணைக்களத்தினரின் செயற்பாடுகள் தொடர்பாகவும் நாங்கள் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
இதேபோல் இலங்கையில் சிவசேனையானது, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. மத மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றது. பசு வதை சட்டத்தை கொண்டுவர சிவசேனை அமைப்பின் பங்களிப்பு அளப்பெரியதாகக் காணப்பட்டது. மறவன் புலவு சச்சிதானந்தன் ஐயாவின் பணிகளுக்கும் சிவசேனையின் பணிகளுக்கும் என்றென்றும் தோளோடு தோள் கொடுப்போம்.
ஈழத் தமிழர்களுக்காக இந்தியா தொடர்ந்தும் குரல் கொடுக்கவும், செயற்படவும் தயாராக இருக்கின்ற நிலையில், 13ஆம் திருத்தம் தொடர்பில் சிலர் அறியாமல் பேசுகின்றனர். 13ஆம் திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றார்.
மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பல மாதங்களாக மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று அதன் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
மருந்துதட்டுப்பாடு தொடர்பில் நேற்று செய்தியாளர்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், ஆய்வுகூடங்களுக்கான இரசாயனங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)