
posted 13th February 2023
காலி கடற்படை முகாம் மீதான தாக்குதல் தொடர்பில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு அரசியல் கைதிகள் 14 வருடங்களின் பின்னர் 13.02.2023 பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
நேற்று காலி மேல் நீதிமன்றில் நடந்த வழக்கில் இவர்கள் நால்வரையும் 5 இலட்சம் ரூபாய் காசுப் பிணையிலும், ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும் செல்ல நீதிபதி அனுமதியளித்தார்.
2006 ஒக்ரோபர் 18ஆம் திகதி காலி தெற்கு கடற்படை முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கடற்படையை சேர்ந்த கனக சுரங்க என்பவர் உயிரிழந்தார். அத்துடன், 22 பேர் காயங்களுக்கு உள்ளாகினர். இது தொடர்பாக, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக 23 வழக்குகள் கடந்த 2010ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில், முதலாம் எதிரியான கந்தையா இளங்கோ யுத்தத்தின் இறுதிக் காலகட்டமான 2009ஆம் ஆண்டு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
புதுக்குடியிருப்பை சேர்ந்த இளங்கோவுக்கு எதிராக வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களும், 77 சாட்சிகளும், 27 தடயப்பொருட்களும் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் அரச தரப்பு சான்றாக பெயரிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது.
முதலாம் எதிரியின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா தனது பிணை மனு சமர்பணத்தில், கந்தையா இளங்கோவால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல்வாக்கு மூலம் - உண்மை விளம்பல் விசாரணையில் 21.06.2018 அன்று நீதிமன்றால் நிராகரிக்கபப்பட்டு 5 வருடங்களை அண்மிக்கின்றது. அத்துடன், 2009 ஆம் ஆண்டு விமானப் படையின் குண்டு வீச்சால் இளங்கோ தனது வலது காலை இழந்தார். இந்த சம்பவம் நிகழ்ந்து 14 வருடங்களாகியும் விசாரணை முற்று முழுதாக நிறைவடையாது சிறையில் வாடுகிறார் என்றும் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
கே. வி. தவராசாவின வாதத்தையடுத்து காலி மேல் நீதிமன்ற நீதிபதி முதலாம் எதிரியான கந்தையா இளங்கோ உள்ளிட்ட நான்கு தமிழ் அரசியல் கைதிகளையும் பிணையில் செல்ல அனுமதியளித்தார்.
இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் பிரதி மன்றாடியார் நாயகம் முஹமட் பாரி முன்னிலையானார். அரசியல் கைதிகளின் சார்பில் சட்டத்தரணி த. தர்மராஜாவின் அனுசரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா முன்னிலையாகி வாதிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
வரவு - செலவு திட்டம் நாளை
யாழ். மாநகர சபையின் வரவு - செலவு திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது. மாநகரின் ஆட்சிக்காலத்தில் ஏற்கெனவே, வரவு - செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் பதவியிழந்த தற்போதைய முதல்வர் இ. ஆனல்ட் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கிறார்.
இன்றைய தினம் நடைபெறவுள்ள வரவு - செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தமிழரசு கட்சி தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றது.
இந்த வரவு - செலவு திட்டத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை.
மணிவண்ணன் தரப்பு வரவு - செலவு திட்டத்தை எதிர்க்கும். இதேசமயம், ஈ. பி. டி. பியின் நிலைப்பாடு என்ன என்பதும் தெரியவரவில்லை.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)