பலவகைச் செய்தித் துணுக்குகள்

வடமாகாண பிரதிப் பிரதம செயலாளராக திருமதி சுகுணரதி தெய்வேந்திரம்

வடமாகாண பிரதிப் பிரதம செயலாளராக திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் புதன்கிழமை (01) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

வடமாகாண மனிதவள முகாமைத்துவம் மற்றும் பயிற்சிநெறி பிரதிப் பிரதம செயலாளராக வடக்கு மாகாண ஆளுநரால் அவருக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

திருமதி சுகுணரதி தெய்வேந்திரன் யாழ். பிரதேச செயலாளராக, யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக, இந்து கலாசார அமைச்சின் செயலாளராக பின்னர் பொது நிர்வாக உள்நாட்டவர்கள் அமைச்சில் சிரேஷ்ட நிலை அதிகாரியாக கடமையாற்றிய நிலையில் வடமாகாண சபைக்கு மாற்றம் பெற்று வந்தார்.

இந்நிலையில் வடக்கு மாகாண மனிதவள முகாமைத்துவ பயிற்சிநெறியின் பிரதிப் பிரதம செயலாளராக கடமையாற்றிய உமா மகேஸ்வரன் வடக்கு மாகாண கல்வி நிர்வாக பண்பாட்டு அலுவல்கள் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்ட நிலையில் குறித்த வெற்றிடத்திற்கு சுகுணரதி தெய்வேந்திரம் நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக அ. உமா மகேஷ்வரன் நேற்று (01) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

மத்திய அமைச்சின் இந்து கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய உமா மகேஸ்வரன் கடந்த மாதம் வடமாகாண சபையின் மனித வள முகாமைத்துவ மற்றும் பயிற்சி நெறியின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது கல்வி அமைச்சின் செயலாளராக பதவி மாற்றம் பெற்றுள்ளார்.



லொறியை அபேசாக்கியவர் அகப்பட்டார்

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் லொறி சாரதியை அச்சுறுத்தி, லொறியை திருடிச்சென்றதாகக் கூறப்படும் சம்பவத்தோடு தொடர்புடைய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

லொறிச் சாரதி லொறியை நிறுத்தி தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும் போது அவ்விடத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் சாரதியை பயமுறுத்தி லொறியைப் பறித்துச் சென்றதாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான முறைப்பாட்டின் பேரில் திருடப்பட்ட லொறியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதோடு, சந்தேக நபர் ஒருவரை மானிப்பாய் பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் 33 வயதுடைய ஆனைக்கோட்டைப் பிரதேசத்தை சேர்ந்தவர். மேலும், சந்தேக நபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், மானிப்பாய் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


கோமாளித்தனமான கருத்துக்களை வெளியிடும் சுமந்திரன்

ஜனாதிபதி சட்டத்தரணியான எம். ஏ. சுமந்திரன் தன்னை ஒரு கல்விமானாக காட்டிக்கொண்டு மூன்றாம் தரமான அரசியல் நாகரிகமற்ற கோமாளித்தனமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என்று ஈ. பி. ஆர். எல். எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று (01) புதன்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

சுமந்திரனின் கருத்துகள் தனிநபர் மீது சேறுபூசும் நடவடிக்கையாகவேதான் கருதுகிறோம். தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள சகல கட்சிகளையும் ஒன்றிணைக்கும் செயல்பாடடுக்கு சுமந்திரனே முட்டுக்கட்டையாக இருந்தார். அத்துடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டும் என்ற தீர்மானம் முன்வைக்கப்பட்ட போதும் அதுவும் அவர்களால் நிராகரிக்கப்பட்டிருந்து என்றும் அவர் மேலும் கூறினார்.


'விழித்தெழு' வீதி நாடகம்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கூத்தாட்டு அவைக் குழாத்தின் 'விழித்தெழு' என்னும் பெயரில் அமைந்த வீதி நாடகம் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் ஆற்றுகை செய்யப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நாடக ஆற்றுகை ஏற்பாடு செய்யப்பட்டது.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் நேற்று புதன் (01) மாலை நடைபெற்ற விழித்தெழு வீதி நாடக ஆற்றுகையில் யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரி ராம் மகேஷ் உள்ளிட்ட இந்தியத் தூதரக அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

10 கலைஞர்கள் பங்கு கொண்ட இந்த நாடக ஆற்றுகையானது போதைப்பொருட்களிலிருந்து எவ்வாறு மாணவர்கள் மற்றும் இளைய சமூகம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை மையப் பொருளாக கொண்டு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் நாடகவியலாளர் விஜயரூபனின் நெறியாள்கையில் அரங்கேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


கடற்பாதை பழுது - பயணிகள் பரிதவிப்பு

காரைநகர் – ஊர்காவற்றுறைக்கு இடையே சேவையில் ஈடுபட்ட கடற்பாதை பழுதடைந்தததால் கடற்பயணத்தில் ஈடுபடும் பயணிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.

காரைநகர், வட்டுக்கோட்டை பகுதிகளில் இருந்து ஊர்காவற்துறையில் நீதிமன்றம், வைத்தியசாலை, பிரதேச செயலகம் ஆகியவற்றில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் வேறு தேவைகளுக்கு பயணம் செய்வோர் குறித்த கடற்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த கடற்பாதை பழுதடைந்ததால் கட்டணம் செலுத்தி படகு மூலம் பயணம் செய்யவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தக் கடற்பாதையானது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கண்காணிப்பின் கீழ் இயங்கி வந்தது. இருப்பினும், அவர்களிடம் நிதி வசதி இல்லாத காரணத்தால் அந்த பாதையை சீர்செய்ய முடியவில்லை.

இதனை சரி செய்வதற்காக காரைநகர் பிரதேச சபையில் “குறித்த கடற்பாதையை பிரதேச சபை பொறுப்பேற்று பராமரிப்பது” என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், கடற்பாதையை பிரதேச சபையிடம் கையளிக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை மறுத்துள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் க. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

எனவே, பிரதேச சபை அல்லது வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஒரு முடிவுக்கு வந்து இந்த கடற்பாதையை மீளவும் சேவையில் ஈடுபடுத்துமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



எப்போது தமிழ் மக்களின் உரிமைகள் கிடைக்கிறதோ அப்போதுதான் சுதந்திர தினம் எமக்கும் - சிவ சக்திகிரீவன்

தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகள் கிடைக்கும் வரை சுதந்திர தினத்தைப் பகிஷ்கரிப்பது நியாயமானது - வரவேற்கத்தக்கது. இதற்காக அமைதிவழியில் போராடுவது அதைவிட மேலானது. தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்குவது தெய்வநீதி அதைச் செய்யாது விடுத்து தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்கமுடியாததாகிறது.

இவ்வாறு இந்து சமயப் பேரவையின் தலைவர் ஈசான சிவ சக்திகிரீவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

இலங்கை சுதந்திரமடைந்த பின் இந்த நாட்டை ஆட்சி செய்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த கட்சிகள் தமிழ் மக்களைக் கிஞ்சித்தும் மதித்ததாகத் தெரியவில்லை.

தங்களின் தேவைகளுக்கு தமிழ் மக்களையும், தமிழ்த் தலைவர்களையும் ஏமாற்றி தங்கள் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றுவதில் எல்லாம் வல்லவர்களானார்கள். முன்னொருபோது முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கில் சேர். பொன் இராமநாதனை ஏமாற்றி பிரித்தானிய அரசோடு பேச வைத்து தமது காரியத்தைச் சாதித்த பின்னர் அப்பெருவள்ளலின் காலையே வாரியவர்கள்.

அவரின் வழித்தோன்றல்களைப் பார்த்து தமது உரிமையைக் கேட்டதற்காகப் பாராளுமன்றில் போர் என்றால் போர் சமாதானமென்றால் சமாதனம் என்று கூறிப் போரைத் தொடக்கியவர்கள்.

போரின் உச்சக்கட்டத்தில்1987இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு உடன்பட்டு சிலகாலம் நடைமுறைப்படத்திவிட்டு அதை நீர்த்துப் போகச் செய்தவர்கள். இதன்பின் உலகில் மாபெரிய ஜனநாயக நாடான இந்தியா மாபெரும் தலைவரையே இழக்க வேண்டியதாயிற்று.

உரிமைக்காகப் போராடும் தமிழர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் இந்தஅரசு, 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று போராடுபவர்களை கைதுசெய்யாதிருப்பது ஏன் என்பதை ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றார்..



தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை

மூன்று தமிழ் அரசியல் கைதிகள் நேற்றிரவு புதன் விடுதலை செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குணசிங்கம் கிருபானந்தம், கிளிநொச்சியை சேர்ந்த செல்லையா சதீஸ்குமார், மன்னாரை சேர்ந்த விக்ரர் ரொபின்சன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களில் இருவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர். கிருபானந்தம் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். இவருக்கு, கடந்த மாதமே அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று, விக்ரர் ரொபின்சன் கடந்த 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் நேற்றிரவு (01) விடுதலையாகினர்.

இதேநேரம் விடுதலை செய்யப்பட்ட மூன்றாவது நபரான கிளிநொச்சியை சேர்ந்த செல்லையா சதீஸ்குமார் 2007ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். கிளிநொச்சி மருத்துவமனையின் அம்புலன்ஸ் சாரதியான இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.

இதனால் அவர் நேற்றிரவு (01) விடுவிக்கப்படவில்லை. மேன்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றதும் விடுவிக்கப்படுவார் என்று அறிய வருகிறது.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)