
posted 20th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக இளைஞர் ஒருவர் ஏறாவூரில் உயிரிழந்தார். இந்நிலையில், டெங்கு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி நேற்று முன்தினம் மட்டும் 14 பேர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கு. சுகுணன் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் - ஐயங்கேணி பாரதி கிராமத்தைச் சேர்ந்த பகீரதம் தனுஷ்கரன் (வயது 22) என்பவரே டெங்கு நோயால் உயிரிழந்தவராவார்.
உயிரிழந்த இளைஞர் நோய்த் தாக்கம் காரணமாக கடந்த 16ஆம் திகதி மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதேசமயம், பருவமழை இடையிடையே தொடர்வதால் மட்டக்களப்பில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. களுவாஞ்சிக்குடி, செங்கலடியை சேர்ந்த தலா இருவரும் வாழைச்சேனையில் ஒருவரும் கோறளைப்பற்று மத்தி, மட்டக்களப்பு நகரப் பகுதியில் தலா நால்வருமாக 14 பேர் டெங்கு நோய் தாக்கம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கத்தை சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் காய்ச்சல் போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும்போது உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறுமாறும் சுகாதார மருத்துவ அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)