கிராமங்களில் கட்சியென்று மக்களை பிரித்தாளும் அரசியல் கட்சினருக்கு சங்கு ஊதப்படுகின்றது

தமிழர் கட்சிகள் பிரிந்து நின்று தமிழர் நலன் கருதாது தங்கள் கட்சிகள் வளர்ந்தால் தாங்கள் வளர்ந்தால் போதும் என்ற நிலைக்கு வந்த நிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட சில கிராம மக்கள் ஒன்றுதிரண்டு சுயேட்சையாக களம் இறங்கியுள்ளது.

இதன் வேட்பாளர் அறிமுக விழாவும் பேசாலையில் இதற்கான அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டபோது இது தொடர்பாக இங்கு ஒருசிலர் உரையாற்றும்போது கருத்துக்கள் தெரிவிக்கையில்;

நாம் கடந்த காலத்தில் பாரம்பரிய கட்சி என அவர்களுக்கு எமது ஆதரவுகளை வழங்கி ஈற்றில் ஏமாற்றப்பட்டவர்களாக ஆகிவிட்டோம்.

எம்மில் பலர் இன உணர்வோடும், பணத்துக்காகவும், மதுவுக்காகவும் ஏமாற்றப்பட்ட ஒரு இனமாக நாம் இருக்கின்றோம்.

இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் மூலம் நாம் ஒரு அரசியலை மாற்றுபவர்கள் அல்ல. மாகாண சபையை மாற்றி அமைப்பவர்களும் அல்ல.

ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்கள் நலன் நோக்காது தங்கள் சுயநல போக்கில் செயல்பட்டுள்ளனர். இவற்றுக்கெல்லாம் சங்கு ஊதும் ஒரு தேர்தலை சந்திக்கப் போகின்றோம்.

இதற்காக இங்கு பாராம்பரியமாக இருந்த தமிழ் உணர்வாளர்கள் , தமிழ் தேசியம் , தமிழர் உரிமை , தமிழர் விடுதலை போன்ற கோட்பாடுகளுடன் இருக்கும் எந்த கட்சியையும் நாம் விமர்சிப்பவர்களும் அல்ல.

ஆனால் எமது பிரதேசத்தை கட்சி என்ற ரீதியில் அல்லாது சுயேட்சை என்ற ரீதியிலேயே ஒன்றுபட்ட சமூகமாக நாம் இவ் தேர்தலை சந்திக்கப் போகின்றோம்.

பேசாலை கிராமம் மாவட்டத்தில் ஒரு பரந்த சனத்தொகை கொண்ட கிராமம். ஆனால் நாம் கடந்த தேர்தலில் கூடிய ஆசனத்தைப் பெற்றபோதும் எம்மால் ஆட்சிப் பீடம் ஏறமுடியவில்லை.

இவ் பகுதியில் ஆட்பலம் உண்டு. அறிஞர்கள் படித்தவர்கள் குறிப்பாகச் சொல்லப் போனால் இந்த பேசாலையில் என்னதான் இல்லை.

ஆனால் ஒரு சரியான பஸ் தரிப்பிடம் இல்லை. சரியான சந்தை இல்லை. இதெல்லாம் யார் செய்ய வேண்டியது? நாம் முன்பு தேர்ந்தெடுத்தவர்கள் செய்திருக்க வேண்டும்.

மேலும் இந்த பகுதியில் கனியவள மணல் அகழ்வு காற்றாலை எல்லாம் இந்த மக்களின் எதிர்ப்புக்கு மாறாக இந்த பிரதேச சபையின் ஆசீருடனோ அல்லது ஆசீர் இன்றியோ அரங்கேற்றப்பட்டுள்ளது.

ஆகவே நாம் ஒன்றுபட்ட சமூகமாக சுயேட்சை என்ற சங்கு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலம் பாரம்பரிய கட்சிகள் என்று எம்மை ஏமாற்றியவர்களுக்கு ஊதுகின்ற சங்காக இருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் இந்த அரசியல் கட்சிகள் எல்லாம் எம்மையே பிரித்து குளிர் காணந்துள்ளனர். ஆனால் நாம் இப்பொழுது வெற்றியீட்டி விட்டோம். ஏனென்றால் எமது ஒருசில ஊர்கள் இப்பொழுது ஒன்றுபட்டு இவ் தேர்தலை சந்தித்தள்ளது.

ஆகவே எமது தேர்தல் சின்னமாக வழங்கப்பட்டிருக்கும் சங்கு அரசியல் கட்சிகளுக்கு ஊதும் சங்காக அமையட்டும் என இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

கிராமங்களில் கட்சியென்று மக்களை பிரித்தாளும் அரசியல் கட்சினருக்கு சங்கு ஊதப்படுகின்றது

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)