
posted 18th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
சீன அரசாங்கம் மீனவர்களுக்கு மாணியமாக டீசல் வழங்கியுள்ளது. அந்த டீசலை மண்ணெண்ணெய்யாக மாற்றி மீனவர்களுக்கு தருவதாக அரசு கூறியிருந்தது. இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அந்த செயற்பாடுகள் நடைமுறையில் இல்லை. இன்றைய கடற்தொழில் அமைச்சரைவிட முன்னாள் கடற்தொழில் அமைச்சராக இருந்த மங்கள அமரவீர அவர்கள் மிகவும் தகுதியானவர் என்று மன்னார் மாவட்ட கடல்தொழிலாளர் கூட்டறவு சங்கங்களின் சமாசத் தலைவர் எல்.எம். ஆலம் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீனவர் சமூகத்துடனான சந்திப்பு குறித்து வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக எல்.எம். ஆலம் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
டக்களஸ் தேவானந்தா கிராமிய மீனவர் அமைப்புகளை சந்திக்க வருகை தந்துள்ளார். எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர் எம்மை எதிரியாக பார்க்கிறார். தனது திட்டங்களை தனது கட்சி சார்ந்து செயல்படுபவர்களுக்கு கொடுக்கிறார். கேள்விகள் கேட்டு கருத்துக்கள் கூறும் அமைப்புக்களை ஒதுக்கி விடுகிறார்.
மன்னார் மாவட்ட மீனவர்கள் எரிபொருள் பிரச்சினை, இந்திய மீனவர்களின் வருகை, பொருளாதார விலை ஏற்றம், மின் கட்டண உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்திய மீனவர்களின் அந்துமீறிய மீன் பிடி குறித்து முன்னாள் மீன் பிடி அமைச்சர் மங்கள அமரவீர அவர்களின் முயற்சியில் 2016ம் ஆண்டு இந்திய மீனவர்களுடன் பேச்சுவார்தை ஒன்று இடம்பெற்றது. அதில் சில விடயங்களை இந்திய மீனவர்கள் எற்றுக் கொண்டார்கள். ஆனால் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போது இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தைகளுக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். ஏனெனில் அவர்களும் எம்மைப் போன்று சுயாதீனமாக செயற்படுபவர்கள்.
மேலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு எந்த ஒரு நிவாரண கொடுப்பனவுகளும் மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை.
அமைச்சர் மன்னார் வரும் போதெல்லாம் மீனவர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அறிக்கை இடுவதோடு முடிந்து விடுகிறது. அதனால்தான் தற்போதைய மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை விட பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் மீன்பிடி அமைச்சர் மங்கள அமரவீர சிறந்த நிர்வாகி என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறேன் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)