
posted 19th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
விபத்தில் உயிரிழந்த தமது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அதிதிகளாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
சடுதியான இறப்பின் பின்னர் சிறுநீரகம் போன்ற உறுப்புகளை தானம் செய்வதனால், சிறுநீரக தேவையை எதிர்பார்த்து, அவதியுறும் இன்னொருவருக்கு உயிர் வாழ சந்தர்ப்பம் ஏற்படுகிறது.
அந்த வகையில் இச்சிறுநீரக தானத்தை உயிரிழந்தவரது பெற்றோரின் ஒப்புதலுடன், அவர்களது விருப்பத்தின் பெயரில் இன்னொருவருக்கு தானமாக வழங்கப்பட்ட நிலையில், சிறுநீரக செயலிழப்பினால் அவதியுற்ற நபரொருவருக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் மூலம் அந்த சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
இந்நிலையில் அறுவைச் சிகிச்சையளிக்கப்பட்ட நபர் தற்போது உடல் நலம் பெற்றுள்ளார்.
இதன் காரணமாக சிறுநீரக தானம் செய்த பெற்றோர் அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு, அவர்களால் மருத்துவமனையின் சிறுநீரகக் குருதி சுத்திகரிப்பு பிரிவில் விரிவாக்கம் செய்யப்பட்ட மேலும் மூன்று சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் அடங்கிய பகுதி திறந்து வைக்கப்பட்டது.
இந்த மூன்று சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கியவர்களுக்கு வைத்தியசாலை சார்பில் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் மருத்துவ பீடாதிபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)