
posted 24th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
“கிழக்கிலங்கையில் குறிப்பாக கல்முனைப் பிராந்தியத்தில் தமிழ் முஸ்லிம் இன ஐக்கியத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் ஆவார். அவர் போன்று வேறு எந்த அரசியல்வாதியையும் இங்கு குறிப்பிட முடியுமா?” இவ்வாறு கேள்வி எழுப்பினார் கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப்.
கல்முனை பொது நூலகத்திற்கு மர்ஹூம் மன்சூரின் பெயரைச் சூட்டும் பிரேரணை ஒன்று தொடர்பில் இடம்பெற்ற கல்முனை மாநகர சபையின் சர்ச்சைக்குரிய விசேட கூட்டத்தில் குறித்த பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கல்முனை மாநகர சபையின் மேற்படி விசேட பொதுச்சபை அமர்வு சபை சபா மண்டபத்தில் பரபரப்பான நிலையில் இடம்பெற்றது.
இதன்போது அமர்வில் கலந்து கொண்ட தமிழ் - முஸ்லிம் உறுப்பினர்களிடையே பெரும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன், தமிழ் உறுப்பினர்கள் சகலரும் குறித்த பிரேரணைக்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் குறித்த பிரேரணை மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி றகீபினால் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக 23 உறுப்பினர்களும், எதிராக 12 உறுப்பினர்களும், வாக்களித்ததோடு 5 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருக்கவுமில்லை.
ஆளும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சிறீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய காங்கிரஸ் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சாய்ந்தமருது தோடம் பழ சுயேச்சைக்குழு உறுப்பினர்களுமாக 23 முஸ்லிம் உறுப்பினர்களே ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மான் சின்ன சுயேச்சைக்குழு உறுப்பினர்களுமாக 12 தமிழ் உறுப்பினர்கள் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தனர்.
வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதாக ஆரம்பத்தில் கூறிய மேயர் றகீப் வாக்குகள் சமனாகவரின் தமது வாக்கு பிரேணைக்கு ஆதரவானதே எனவும் பிறிதொரு சந்தரப்பத்தில் கூறினார்.
மேயர் றகீப் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ் - முஸ்லிம் இன ஐக்கியத்திற்கு பாலமாகத்திகழ்ந்த முன்னாள் அமைச்சர் மர்ஹூம் மன்சூர், முஸ்லிம் பிரதேசங்களுக்கு மட்டுமன்றி தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் அளப்பரிய சேவையாற்றினார்.
அவரது ஞாபகார்த்தமாக அவரால் நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகத்திற்கு அவரது பெயரை இடுவதால் ஒரு போதும் தமிழ் முஸ்லிம் இனவிரிசல் ஏற்படப்போவதில்லை என்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும், ரெலோ அமைப்பின் உப தலைவருமான ஹென்ரி மகேந்திரன் பிரேரணை மீது உரையாற்றுகையில்,
மர்ஹூம் மன்சூரின் நல்லபக்கமென ஒன்றிருந்தாலும் சுட்டிக்காட்டத்தக்க மற்றொரு பக்கமும் உண்டு என்பதையும் எம்மால் கூறமுடியும்.
கல்முனையைப் பிரதி நிதித்துவப்படுத்தி மக்கள் பிரதிநிதிகளாக இருந்த அமரர்களான தம்பிப் பிள்ளை, வேல்முருகு மாஸ்டர், விஜயாமுதலாளி போன்றவர்களின் ஞாபகர்த்தமாக இத்தகைய பெயர்கள் வைப்பதற்கு நீங்களெவரும் சிந்திக்கவில்லை.
கதைத்துப் பேசி செய்ய வேண்டிய விடயத்தைத் திடுதிப்பென, பெரும்பான்மையைக் காட்டி செய்யமுனைந்துள்ள கபடத்தனத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்” என்றார்.
கூட்டமைப்பு உறுப்பினர் பொன். செல்வநாயகம் உரையாற்று கையில்,
கடந்த 33 வருடகாலமாக கல்முனையில் அடிமை நிலையிலும், ஆக்கிரமிக்கப்பட்டவர்களாவும் வாழும் துயர நிலையில் தமிழினம் உள்ளது.
கல்முனை தமிழர்களுக்கான தமிழ் பிரதேச செயலகத்தை முதலில் தடுத்து நிறுத்தியவர் முன்னாள் அமைச்சர் மன்சூர் தான் என்ற காசப்பான உண்மையும் எம்மிடமுண்டு என்றார்.
உறுப்பினர்களான க. குபேரன், சந்திர சேகரம் ராஜன், ஆகியோரும் பிரேரணையை எதிர்த்தும், ஆட்சேபித்தும் உரையாற்றினர்.
சில தமிழ் உறுப்பினர்கள் கடந்த மாதாந்த அமர்வின் பின் நடத்திய ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயம் தொடர்பில் தம்மை சம்பந்தப்படுத்தி உண்மைக்குப் புறம்பாக அவதூறு பரப்பியதாக கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்ரி மகேந்திரன் தன்னிலை விளக்கமொன்றiயும் அமர்வில் வெளிப்படுத்தினார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)