
posted 18th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
தற்பொழுது நாட்டில் நிலவிவரும் பொருளாதாரத்தில் சிக்கியுள்ள மக்கள் குறிப்பாக நோயாளிகள் நாளாந்தம் மருந்து பாவிப்போர் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்து வருகின்றனர்.
ஆங்கில மருந்து வகைகளை பெறுவதில் பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கும் நோயாளிகளில் அதிகமானோர் தற்பொழுது ஆயுள்வேத மருந்துகள் இலவசமாக பெறக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவித்து வடக்கு பகுதியில் அதிகமான நோயாளிகள் ஆயுள்வேத வைத்தியத்துக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் வடமாகாண அரச ஆயுள்வேத வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தப்பட்ட உள்நோயாளர் விடுதிகளும், மருந்து விற்பனை நிலையமும் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் வடக்கு மாகாண ஆயுள்வேத மருத்துவத்தை நாடும் நோயாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் உண்டு பண்ணியுள்தாக கவலை தெரிவிக்கின்றனர்.
வட மாகாணத்தில் உள்ள அரச ஆயுள்வேத வைத்தியசாலைகளில் மாவட்ட சித்த மருத்துவமனை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் கட்டணம் செலுத்தப்பட்ட உள்நோயாளர் விடுதிகளும், மருந்து விற்பனை நிலையமும் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? என கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இது ஏனைய மாவட்டங்களிலுள்ள அரச சித்த மருத்துவ நிலையங்களுக்கும் பரவிவிடும் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
வட மாகாணம் போரால் பாதிக்கப்பட்ட ஒரு மாகாணம். இங்கு ஆயுள்வேத சிகிச்சையை நலிவுற்ற மக்களே பெரும்பாலும் பயன்படுத்தகின்றார்கள்.
இவ்வாறு இருக்க அரச ஆயுள்வேத வைத்திசாலைகளில் பணம் செலுத்தியே வைத்தியத்திற்கு உட்படுவதால் நலிவுற்ற மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எனவே சமூக பொறுப்புள்ள சமூக பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு ஆயுள்வேத சிறந்த சேவையை இலவசமாக மட்டும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)