அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒரு நாள் சுகயீன போராட்டம்

சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரச நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழுவுடன் இணைந்து புதன்கிழமை (08) ஒரு நாள் சுகயீன விடுப்பு போராட்டத்தை பின்வரும் கோரிக்கைக்காக மேற்கொண்டனர்.

அதாவது அரசசேவையின் அனைத்து பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கும் சமாந்தரமான பதவி உயர்வினை வழங்கும் பொறிமுறையை உறுதி செய்ய வேண்டும் என்றும்,

பதவி நிலை உத்தியோகத்தர்களின் சம்பளத்தினை பிற்போடும் அமைச்சரவை தீர்மானத்தை திரும்பப் பெறவேண்டும் என்றும்,

அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் குறிப்பிட்ட தினத்திலேயே சம்பளத்தினை வழங்க வேண்டும் என்றும்,

சேவையின் மீதானவரி விதிப்பில் நியாயமான கொள்கை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரியே இப் போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.

இதற்கமைய சித்த மருத்துவ மனைகளில் உள்நோயாளர் பிரிவு தவிர்ந்த ஏனைய பிரிவுகளில் சேவைகள் நடைபெறவில்லையெனவும், உள்நோயாளர் பிரிவு வழமை போன்று நடைபெற்றது என தெரிவித்துள்ளனர்.

சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரச நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழுவுடன் இணைந்து நடாத்திய ஒரு நாள் சுகயீன விடுப்பு போராட்டத்தின் போது மன்னார் மாவட்ட சித்த மருத்துவ மனை வெறிச்சோடிக் கிடந்தது.

அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒரு நாள் சுகயீன போராட்டம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)