
posted 20th February 2022
“துணிச்சலும், நேர்மையும் கொண்டு ஐம்பது வருட காலம் கடந்த ஊடகப் பணியைத் தொடரும் பொன் விழா நாயகன் தில்லை நாதனுக்கு தென் கிழக்கிலிருந்தும் எமது நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்”
இவ்வாறு, வடக்கின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.தில்லை நாதனின் 50 வருட ஊடகத்துறை சேவைக்காக இன்று ஞாயிறு நடைபெறவிருக்கும் சேவை பாராட்டு விழாவையொட்டி தென் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஊடகத்துறையில் 50 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள மூத்த ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லை நாதனின் சேவையைப் பாராட்டும் நிகழ்வு ஒன்றை, அல்வாய், மாலைச் சந்தை மைக்கல் நேசக்கரம், மைக்கல் விளையாட்டுக்கழகத்தினர் நடத்தவுள்ளனர்.
யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த (வயது 71) மூத்த ஊடகவிலாளர் சின்னத்துரை தில்லை நாதனின் இந்த சேவையைப் பாராட்டும் நிகழ்வு, மாலை சந்தை, மைக்கல் நேசக்கரம் மற்றும் மைக்கல் விளையாட்டுக்கழகத்தலைவர் த.வேணுகானன் தலைமையில், மைக்கல் விளையாட்டுக்கழக பொது மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.
இதனையொட்டி ஊடகத்துறைசார்ந்த, மற்றும் பொது அமைப்புகள் பலவும், மூத்த ஊடகவியலாளர் தில்லை நாதனுக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்துள்ளன.
தென்கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வடக்கின் மூத்த ஊடகவியலாளர் திலை;லைநாதன் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஆற்றிவரும் ஊடக சேவை விதந்து பாராட்டத்தக்கதாகும்.
71 வயதுடைய அவர் இன்னும் தனது தளராத ஊடக சேவையை மக்கள் நலன் சார்ந்து முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பாக மூன்றுதசாப்த காலயுத்த காலத்தில் பல்வேறு சவால்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தளராது ஊடகப்பணியை நீதி, நேர்மையுடனும், துணிச்சல், பக்கசார்பின்மையுடனும் முன்னெடுத்து வந்தவர் அவர், அவரது பேனா முனையின் கருத்து வெளிப்பாடுகள் சிலருக்குக் கசப்பானவைகளாக அமைந்த போதிலும் அவை மக்களின் குரலாக, மக்களின் சமூக, பொருளாதார, வாழ்வியல் விடிவுக்கான ஆணித்தரமான கருத்துக்களாக அமைந்து வந்ததுடன், இதன் காரணமாக மக்கள் சேவைக்கெனப்பலரையும் கவனம் கொள்ளவும், மக்கள் பக்கம் திரும்பிப்பார்க்கவும் வைத்தன.
அச்சு ஊடகத்துறையில் மட்டுமன்றி, இலத்திரனியல் ஊடகத்துறையிலும் கால்பதித்து தன் ஆற்றல், திறமைகளை வெளிப்படுத்திவரும் மூத்த ஊடகவியலாளர் தில்லை நாதன் ஊடகங்களின் ஆசிரிய பீடங்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் வென்ற ஒருவராவார்.
வடக்கைச் சேர்ந்தவராக இருப்பினும், கிழக்கிலும் ஏன் தலை நகருட்பட ஏனைய மாவட்டங்களின் ஊடகவியலாளர்களதும் நன்மிப்பையும், ஊடக நட்பையும், நெருக்கத்தையும் கொண்டவராவார்.
வளரும் இளம் ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாகவும், உதாரண புருஸராகவும் திகழும் அன்னாரை வாழ்த்துவதில் தென்கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மகிழ்வடைவதுடன், மூத்த ஊடகவியலாளர் தில்லை நாதனின் கடந்த 50 வருடங்களுக்கு மேலான ஊடகத்துறை அனுபவங்களை நூலுருவில் கொண்டுவரும் முயற்சியும் எடுக்கப்பட வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் கோருகின்றோம்.” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House