
posted 24th February 2022
வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.
வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியும், மகாவலி எல் வலயம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை ஒன்றை முன்னெடுத்தனர்.
நில அபகரிப்பை தடுத்து நிறுத்த வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று போராட்டத்தை முன்னெடுத்த சமயம் ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் ஜனாதிபதியின் செய்தியை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தினார் எனக் கூறப்பட்டது.
இதன்போது குறித்த அதிகாரி, நில விவகாரம் குறித்து பிரதமரிடம் பேசுமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டார் எனவும், அடுத்த வாரத்தில் ஜனாதிபதி, ஜனாதிபதி செயலாளர், அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோருடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்புக்கு அழைப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும் இதனையடுத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இப் போராட்டத்தில், தமிழ் மக்கள் கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், வினோ நோகராதலிங்கம், சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த.கலையரசன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா. சாணக்கியன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்