நிந்தவூரில் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு

நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவை சாதனையாளர் கௌரவிப்பு விழா ஒன்றை சனிக்கிழமை (17-12-2022) சிறப்பாக நடாத்தியது.

பேரவையின் தலைவர் டாக்டர். ஏ.எம். ஜாபீர் தலைமையில், நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் விழாநடைபெற்றது.

விழாவில், நிந்தவூர் மண்ணுக்குப் பெருமை சேர்த்துவரும் இலங்கை தமிழ் இலக்கியப் பரப்பின் முதுபெரும் எழுத்தாளுமை, ஆய்வாளர், கவிஞர், கதைஞர், நாட்டாரியல் முன்னோடி எழுத்தாளர் கலாபூஷணம், இலக்கியவேந்தர் சட்டத்தரணி எஸ். முத்துமீரான் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிகௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் கல்வியலாளர், கவிஞர், பேச்சாளர் எஸ். அகமது, மற்றும் இளைய தலைமுறை எழுத்தாளரும், தேசிய விருதுகளைப் பெற்றவருமான பல்கலைக் கழக மாணவன் ஹஸன் குத்தூஸ் ஜெம்சித் ஆகியோர் சாதனையாளர் விருது வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

கலை இலக்கியப் பேரவை உறுப்பினர்கள் சகிதம் பேரவையின் தலைவர் டாக்டர். ஜாபிர், செயலாளர் தம்பிலெவ்வை இஸ்மாயில் (பொறியியலாளர்) ஆகியோர் சாதனையாளர்கள் மூவருக்கும் விழாவில் பொன்னாடை போர்த்தியும் விருது வழங்கியும் கௌரவித்தனர்.

சாதனையாளர்களான சட்டத்தரணி முத்துமீரான் பற்றி பாவேந்தல் பாலமுனை பாறூக்கும், கவிஞர் அகமது பற்றி அம்பாறை மாவட்ட காலச்சார உத்தியோகத்தர் ரி.எம். றிம்சானும், எழுத்தாளர் ஜெம்சித் பற்றி, சித்திலெப்பை ஆய்வுப் பேரவையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.என். மர்சூம் மௌலானாவும் சிறப்புரைகளையும் ஆற்றினர்.

நிந்தவூர் மண்ணுக்குப் பெருமை சேர்த்துவரும் அவர்களது கலை, இலக்கிய சாதனைகள் பற்றிவிதந்து பாராட்டுக்களும் விழாவில் தெரிவிக்கப்பட்டன.

அதேவேளை நிந்தவூர் கலை இலக்கியப் பேரவையின் சிறந்த தொடர்ச்சியான கலை இலக்கியப் பணிகள் தொடர்பிலும், முன்மாதிரி செயற்பாடுகள் தொடர்பிலும் விழாவில் உரையாற்றிய அதிதிகள் பலரும் பெரும் பாராட்டுதல்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.