கௌரவ இலக்கிய கலாநிதி பட்டம்
கௌரவ இலக்கிய கலாநிதி பட்டம்

பேராசிரியர் தில்லைநாதன்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வில் பேராதணை பல்கலைக்கழக தகைசார் பேராசிரியர் எஸ்.தில்லைநாதனுக்கு கௌரவ இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தகைசார் பேராசிரியர் தில்லை நாதன் பற்றி பல்கலைக்கழக ஊடகப் பிரிவு தலைவரும் பேராசிரியருமான ரமீஸ் அப்துல்லா எழுதியுள்ள கட்டுரை

(பேராசிரியர் றமீஸ் அப்துல்லா)

இன, மத, பேதங்களுக்கு அப்பால் மானுடத்தையும் சமூக நலனையும் நேசிக்கும் மாண்புறு பேராசிரியர் தில்லைநாதன் தனது தேசிய பணிகளுக்காகவும் கல்விப் பணிகளுக்காவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு ஆற்றிய அர்ப்பணமிக்க சேவைகளுக்காகவும் கௌரவ இலக்கிய கலாநிதி பட்டத்திiனைப் பெற்றுக் கொள்கின்றார். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தனது 14வது பட்டமளிப்பு விழாவில் இக் கௌரவத்தினை பேராசிரியருக்கு வழங்கியது. இப்பட்டத்தினை அவருக்கு வழங்குவதன் மூலம் வாழ்வில் எல்லாப் பேறுகளையும் பெற்றிருக்கும் பேராசிரியர் தில்லைநாதன் பெறுகின்ற பெருமையை விட தென்கிழக்குப் பல்கலைக்கழகமே பெருமை பெறுகின்றது, எனலாம்.

யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற சுன்னாகம் கிராமத்தில் சின்னத்தம்பி - நாகம்மா தம்பதிகளுக்குப் மகவாகப் பிறந்த தில்லைநாதனுக்கு இப்போது 85 வயது. தமிழ் கூறும் நல் உலகில் மூத்த பேரரறிஞராக விளங்கும் இவர் சமகால அறிஞர்களுக்கும் நிருவாகிகளுக்கும் முன் உதாரணம் மிக்கவர். பேராசிரியர்களான க. அருணாசலம், துரைமனோகரன்,வ. மகேஸ்வரன், றமீஸ் அப்துல்லா, பிரசாந்தன் ஆகியோரும் இன்னும் பல பல்கலைக்கழக ஆசிரியர்களும் இவரிடம் பாடம் பயின்றவர்கள்; இவர் வழிவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அவர் இக் கௌரவ விருதினைப் பெறுகின்ற சந்தர்ப்பத்தில் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் முதன் முதலில் அவரை சந்தித்த ஞாபகம் வருகிறது. வேலை நாட்களில் காலை 9.00 மணி என்றால் அந்த ஹில்மன் கார் பல்கலைக்கழக வாசலில் வந்து நிற்கும். அதிலிருந்து அந்த வாட்டசாட்டமான உருவம் வெளியே விடப்பட்ட அரைக் கை சேட்டுடன் மிகக் கம்பீரமாக நடந்து வரும். சரியாக நேரத்துக்கு இயங்குகின்ற பண்பும் தொழிலைத் தெய்வமாக கருதுகின்ற வழக்கமும் அவரிடம் இருந்தது. இன்றைய விரிவுரையாளர்கள் அவரிடம் படிப்பதற்கு ஆயிரம் உண்டு. இப்படி அவருக்கே தனி;த்துவமான பல அம்சங்கள் அவரிடம் உண்டு. அவையெல்லாம் இருக்க அவருடைய கற்பித்தலைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

பல்கலைக்கழகத்திலே பாடம் பயில்வதென்றால் பேராசிரியர் தில்லைநாதன் அவர்களிடம் கற்க வேண்டும். ஏலவே தயாரித்து வைக்கப்பட்ட பிரதியுடன் வந்து குறிப்பை வாசிக்கும் அறிவிப்பாளரல்;ல அவர். மிக அற்புதமாகத் தானெடுத்துக் கொண்ட விடயத்தை மணித்தியாலக் கணக்கில் விவரித்து இலக்கிய நோக்கில், தத்துவ நோக்கில் விளக்குகின்ற ஒரு பேராசிரியர். மீண்டும் மீண்டும் அவருடைய விரிவுரையைக் கேட்க வேண்டும் என்ற அவா நம்முள் ஏற்படும் அளவுக்கு அவர் பேசுவார். கம்பராமாயணம் அவருக்குக் கை வந்த கலை. இன்றும் ‘கைகேயி சூழ்வினைப் படல’த்தை அவரிடம் படித்த ஞாபகம் எனக்குண்டு. அவருடைய விரிவுரைப் பாங்கு பலருக்குப் பிடிக்காமலும் இருக்கும். ஏனென்றால் அது மிக ஆழமானதும் உன்னிப்பாகக் கேட்க வேண்டியதுமாகும். இடையிடையே நகைச்சுவையுடன் அமையும் அவருடைய விரிவுரை தனித்துவமானது.

பெரும்பாலான பேராசிரியர்களைப் போல அவர் அதிகம் எழுதியவரல்ல. ஆனால், குறைந்தளவிலே எழுதி அதிக தாக்கத்தை அவருடைய எழுத்துக்கள் உண்டுபண்ணியது. ஓப்பீட்டளவில் அவருடைய கட்டுரை சிறிதாக இருக்கும்; ஆனால், மிக ஆழமாக அமையும். சொல்ல வேண்டிய அத்தனையையும் அவர் மிகுந்த தாக்கத்துடன் அந்தக் கட்டுரைகளில் சொல்லியிருப்பார். அதன் மூலம் மற்றவர்களைச் சிந்திக்கத் தூண்டி இருப்பார். இதுதான் அவருடைய கட்டுரைகளின், ஆய்வுகளின் தனித்துவம் என்று சொல்ல வேண்டும். மிக எளிமையாக எழுதும் அவருடைய மொழி நடையும் விதந்து குறிப்பிடத்தக்கதாகும். கட்டுரைகளை அவர் ஆரம்பிக்கும் முறையும் தனியழகு. சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரைப் பற்றி எழுதவந்த அவர் அக்கட்டுரையைப் பின்வருமாறு தொடங்குகிறார்:
“கருத்துக்களைச் செவ்வனே பரிமாறிக் கொள்ளத்தக்க மொழியாற்றலையும் மானிட வாழ்வு சுமுகமாய் அமைய உதவும் ஒழுக்க நெறிகளையும் மேற்கொள்ளும் கருமங்களில் நேர்மையான முயற்சியுடைமையையும் மாணவர் மத்தியில் வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து அதிகமாக இன்று பேசப்படுகிறது. அவை குறித்த ஆர்வமும் அறிவும் துலங்குவதற்குக் குமாரசுவாமிப் புலவரின் வாழ்வும் பணிகளும் பற்றிய சிந்தனை உதவும் என்பதில் ஐயமில்லை.”

இவ்வாறு அவர் மிக வித்தியாசமாகக் கட்டுரைகளைத் தொடங்குவதும் அவருடைய சொல்லாட்சியும் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும்.

பத்திரிகைகளின் தேவைக்காகவும் சஞ்சிகைகளின் தேவைக்காகவுமே அவர் கட்டுரைகளை எழுதிவந்தார். ஆனால், ஆறுமுக நாவலர், விபுலாந்த அடிகள், பாரதியார், பாரதிதாசன் முதலானவர்களைப் பற்றி அவர் எழுதிய பல கட்டுரைகளைச் சேர்த்து தனித் தனி நூலாகப் பிரசுரிக்க முடியும். அவ்வளவுக்கு அவ்வறிஞர்களைப் பற்றிய விரிவான பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். இவர்கள் தவிர்ந்த மேலும் பல இலக்கிய ஆளுமைகளைப் பற்றி பல்வேறு கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். அதேபோல ஈழத்து இலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழியியல், சமூகவியல் சிந்தனைகள், கலை இலக்கிய விமர்சனம், சமய வாழ்வும் வழிபாடும், தொடர்பாடல், நாட்டாரியல் முதலான பல்துறைகள் பற்றி கட்டுரைகளையும் ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவற்றின் வழியாக நூலாக வெளிவந்தவை ‘வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை’இ ‘இலங்கைத் தமிழ் இலக்கியம்’, ‘இலக்கியமும் சமுதாயமும்’, ‘பண்பாட்டுச் சிந்தனைகள்’, ‘சோழர் கால அரசவை இலக்கியங்கள்’ முதலானவை மாத்திரமே. தற்போது அவரது சில நூல்களை குமரன் புத்தக இல்லம் வெளியிடவுள்ளது. ஆனால், அவரால் நூலாக்கப்பட வேண்டிய பல கட்டுரைகள் அவரிடத்தே உள. அவ்வப்போது தேவைக்கே எழுதிய அவர் அவற்றினை நூலாக்க வேண்டும் என்பதில் அதிகம் அக்கறைப்படவில்லை. அவ்வாறான பணிகளில் ஈடுபடுவதற்கு அவருக்கு நேரம் இருப்பதுமில்லை. இன்றும் கறங்கு போல் சுழன்று பல்வேறு பணிகளை அவர் ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்குள்ளும் பேராசிரியர் தில்லைநாதன் அவர்கள் நல்ல இலக்கியவாதியாகவும் தொழிற்பட்டுள்ளார். இலக்கியவாசிப்பு மாத்திரமின்றி சிறுகதைகளையும் கவிதைகளையும் அவர் எழுதியுள்ளார். ‘தகுதி’, ‘மானிடம் என்பது புல்லோ’ ஆகிய நாடகங்களை எழுதி மேடை ஏற்றிய அவர் ‘சமுதாய விலங்கு’ எனும் நாடகத்தைத் தயாரித்து அளித்துமுள்ளார். நாடகத்துறை சார்ந்த பல்வேறு கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.

நல்லாசிரியராகவும் ஆய்வாளராகவும் இருந்த அவர் தொடர்ச்சியாக நிருவாகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். நிருவாகப் பணியில் அவர் எப்போதுமே தனித்துவமாகச் செயற்பட்டவர். அவர் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலம் பொற்காலமாகும். அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இருந்து எதுவும் தளர்ந்து விடாது. அத்தகைய ஆற்றல் அவருக்கிருந்தது. மாணவர் நலனிலும் ஆசிரியர் நலனிலும் அவர் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டு வந்தார். பல்கலைக்கழக பீட சபையிலும் மூதவையிலும் துணிவுடன் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட அவர் பல்லினச் சமூகத்திற்கு மத்தியில் வாழ மிகப் பொருத்தமானவர். எந்த இடத்திலும் யாருக்கும் அஞ்சாது கருத்துக்களைக் கூறுகின்ற திறன் அவரிடமிருந்தது. அதே நேரம் அவர் கூறுகின்ற கருத்துக்கள் யாராலும் நிராகரிக்கப்படக் கூடியதாயும் இருக்காது. அத்தகைய சொல் வன்மையும் செல்லும் சொல்லும் அவருக்கு வாய்த்திருந்தது.

பேராசிரியர் தில்லைநாதன் அவர்கள் தனது அனுபவம், ஆற்றல் காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்த அதே வேளை பல்கலைக் கழகத்துக்கு வெளியே கலாசார அமைச்சின் கீழ் இருந்த தமிழ் இலக்கியக் குழுத் தலைவராகவும் தமிழ் நாடகக் குழு அங்கத்தவராகவும் பணியாற்றியுள்ளார். இலங்கைக் கலைக் கழகத்தின் உறுப்பினராகப் பணியாற்றிய அவர் அதேபோல இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். இன்றும் அரச கரும மொழிகள் திணைக்களத்திலும் மொழி தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இலங்கையின் தமிழ் கல்வி பாடத்திட்டம் தொடர்பாக விதந்துரைக்கத்தக்க பணிகளை ஆற்றிய பேராசிரியர் தில்லைநாதன் அவர்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ் மொழிப் பிரிவின் ஆலோசனைச் சபை அங்கத்தவராகவும் நிபுணத்துவ ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார். அதன் ஆட்சிச் சபை உறுப்பினராகவும் அவர் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. பரீட்சைத் திணைக்களத்தின் பல்வேறு பொறுப்பு மிக்க பணிகளில் மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றார். பரீட்சைக் காலங்களில் அவருடைய பணி மிகவும் போற்றத்தக்கதாகும். தனக்குக் கீழ் பரீட்சைப் பணிகளில் கடமையாற்றுபவர்களுடன் மிக நிதானத்துடனும் கண்டிப்புடனும் நடந்து கொள்வார். ‘விடைத்தாள் மதிப்பீட்டின் போது நீங்கள் வழங்குகின்ற ஒவ்வொரு புள்ளிக்கும் உயர் நீதிமன்றத்தில் பதில் சொல்வதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா’ என்று கேட்பார். அவ்வளவு கவனமாக , நேர்மையாகப் பரீட்சைப் பணிகளில் ஈடுபடுவதற்கு மற்றவர்களை பழக்கியவர் அவர்.

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாத்திரமன்றி யாழ்ப்பாணம், கிழக்கு, தென்கிழக்கு, ஊவா வெல்லஸ்ஸ, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை வளர்ச்சியில் பெரிதும் அக்கறை காட்டியவர். யாழ்ப்பாணம், கிழக்கு தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்களில் அவரது மாணவர்களே பெரும்பாலும் ஆசிரியப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அதிதிப் பேராசிரியராகவும், நிபுணத்துவ ஆலோசகராகவும் கடமையாற்றிய அவர் இன்றும் அப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை வளர்ச்சியில் அதிக ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றார். அத்தோடு ஈழத்துப் பல்கலைக்கழகங்களில் இன்று தமிழ்த்துறையில் கடமையாற்றுகின்ற அத்தனை பேருக்கும் வழி காட்டுகின்ற முதன்மையாளராகப் பேராசிரியர் தில்லைநாதன் விளங்குகின்றார்.

ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைத்துறை வளர்ச்சியிலும் அவருக்குக் குறிப்பிடத்தக்க பங்குண்டு. 1960களில் தினகரன் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றிய அவர் அக்காலகட்ட ஈழத்து இலக்கியத்தின் திருப்பு முனைக்கும் முக்கிய பங்காற்றியவர். இலக்கிய சர்ச்சை பலவற்றை முன்னின்று செம்மையாக வழி நடத்தியவர். ஓப்சேவர் பத்திரிகையிலும் தமிழ் விடயங்களைப் பற்றி எமுதுவதற்கான ஆசிரியராக இருந்த அவர் தமிழ் இலக்கியச் செழுமையை ஆங்கிலப் பத்திரிகை வாசகர்கள் வருவதற்கும் உதவியாக இருந்தார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலை, ஸ்கந்தவரோதயா கல்லூரி முதலியவற்றின் ஆளுமையாகவும், ஒறேற்றர் சி. சுப்பிரமணியம், பேராசிரியர் மு. வரதராசன், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வித்தியானந்தன் முதலியவர்களின் வழிகாட்டலிலும் உருவான தில்லைநாதன் ஈழத்துத் தமிழ் உலகின் தனித்துவமிக்க பேராசிரியராக திகழ்கிறார். இந்த நாட்டின் வரலாற்றின் சிங்கள, தமிழ், முஸ்லிம் உறவின் கறை படிந்த காலத்திலும் எல்லா இனத்தவரோடும் சேர்ந்து வாழ்ந்து மனிதநேயமிக்கவராகப் பெயர் வாங்கியவர் தில்லைநாதன். அவரது சமூக வாழ்வு, பல்கலைக்கழக வாழ்வு மாத்திரமின்றி குடும்ப வாழ்வும் மிக மகிழ்ச்சியானதாக அமைந்திருந்தது. தில்லைநாதன் - மல்லிகா என்ற பல்கலைகழகத்தின் நல்ல மாணவர்களாக கவிதா, கோபி, திரு ஆகியோர் அமைந்தனர். சிறப்பான விருந்தோம்பல் பண்புகள் நிறைந்த அவர் குடும்பம் அவருடைய மாணவர்கள் பலரால் என்றும் மறக்கப்படக் கூடியதல்ல.

பேராசிரியர் தில்லைநாதன் அவர்களுடனான உறவையும் பண்பையும் புலமையையும் மானிடத்தையும் ஒரு பத்திரிகைக் கட்டுரைக்குள் அடக்கிவிட முடியாது. அவரது ஒட்டுமொத்தமான பண்புகளைப் பற்றி பேராசிரியர் லெஸ்லி குணவர்த்தன அவர்கள், ‘பேராசிரியர் தில்லைநாதன் அவர்கள் மெச்சத்தக்க இலங்கையர் மாத்திரமன்றி மனிதாபிமானம் என்ற மாபெரும் குடும்பத்தின் ஒரு அங்கத்தவராவார்’. எனக் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கதாகும். மேலும், பேராசிரியர் சிவத்தம்பியின் வார்த்தையில் சொன்னால், ‘இன்று விபுலானந்தர் முதல் கணபதிப்பிள்ளை வரை இருந்த ‘தவிசில்’ பேராசிரியராகப் பொலிவுடன் நிறைகிறார்.’ உண்மையில் இன்றும் ஈழத்தின் புலமைசார் அறிஞர்களுள் தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியராகப் பல்துறை ஆளுமைகளுடன் பெருமை பெறுகிற பேராசிரியர் தில்லைநாதனுக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பெருமை பெறுகிறது.

கௌரவ இலக்கிய கலாநிதி பட்டம்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House