
posted 27th February 2022
தமிழ் பேசும் மக்களை அடக்கியொடுக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குவதற்கு அழுத்தங்களை வழங்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்து போராட்டம் இன்று (27) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வடக்கு கிழக்கு தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மாவட்டத் தலைவர் லோகிதராஜா திவாகரன் தலைமையில் இடம் பெற்றது.
ஆரம்ப நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், த. கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், எஸ். ஸ்ரீநேசன், ஜனாப் அமீர்அலி, முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், உறுப்பினர் இரா. துரைரத்தினம், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா யோசேப், மட்டக்களப்பு மாநகரசபை நகரபிதா தியாகராசா சரவணபவன், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேசசபைத் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், உறுப்பினர்கள், இளைஞர் அணித் தலைவர் கி. சேயோன், மகளீர் அணி உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்; பொதுமக்கள் என முஸ்லீம் மற்றும் தமிழ் மக்கள் என பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து, தமது எதிர்ப்பினைத் தெரிவித்து, தமது கையொப்பத்தினைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்குமாறு கோரி இட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த இலங்கை தேசமானது அனைத்து மக்களுக்கும் பொதுவான நாடு என்று கூறப்படு கின்றபோதிலும், இந்த நாட்டில் தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு சட்டமும், பெரும்பான்மை மக்களுக்கு ஒரு சட்டமுமே பயன்படுத்தப்படுகின்றது.
இந்த நாட்டில் தமிழ்பேசும் மக்கள் தங்களுக்கு நடக்கும் அநீதிகளையும், அத்துமீறல்களையும் வெளிப்படுத்தும்போது பயங்கரவாதத் தடைச்சட்டம் எனும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்கான நடவடிக்கைகளே தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினைப் பொறுத்தவரையில் நல்லாட்சிக் காலத்திலும், அதற்கு முற்பட்ட காலத்திலும் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க வேண்டுமென்று தொடர்ச்சியாக வலியுறுத்தியே வந்திருக்கின்றது.
தற்போதைய ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்தினை குழி தோண்டிப் புதைக்கும் வகையில் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பயங்கரவாதத் தடைச்சட்டம் ஊடாக பல தமிழ் இளைஞர்களும், ஊடகவியலாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படும் நிலையினைக் காண முடிகின்றது.
தனது இனத்திற்காக உயிர்நீத்த உறவுகளை நினைவு கூரமுடியாத வகையில் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதுடன், ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடாத்துவதற்கும் இந்தச் சட்டத்தின் மூலம் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் காரணமாக வட-கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் சிறு பான்மை சமூகம் மட்டுமன்றி, பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக அணி திரண்டுள்ளதைக் காணமுடிகின்றது.
அதேவேளை வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்கள் தவிர்ந்த மலையகம், பெரும்பான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் கையெழுத்துப் பெறப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.
அத்தோடு இதன்போது கலந்து கொண்டோர் இணைந்து அரசுக்கெதிரான கோசங்களை எழுப்பியிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House