13 ஐ கோருவதும் நிராகரிப்பதும் பாராளுமன்ற கதிரைகளைப் பிடிப்பதற்கான போட்டியின் தொடர்ச்சியே
13 ஐ கோருவதும் நிராகரிப்பதும் பாராளுமன்ற கதிரைகளைப் பிடிப்பதற்கான போட்டியின் தொடர்ச்சியே

புதிய ஜனநாயக மார்க்சிய கட்சியின் பொதுச் செயலாளர் காசி செந்திவேல்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு அறிக்கை

எஸ் தில்லைநாதன்

இலங்கையின் அரசியல் அமைப்பில் இருந்துவரும் பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தனது அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்திற்குக் கொடுக்க வேண்டும் எனத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஆறு தமிழ்க் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த மாதம் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்தனர். அதேவேளை பதின்மூன்றாம் திருத்தம் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதென்றும் அதனை நிராகரிக்க வேண்டும் எனக் கூறி அதனைச் சவப் பெட்டியில் வைத்துக் கூட்டம் நடாத்தியிருக்கிறது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

இவ்விரு தமிழ்த் தேசியவாதத் தரப்புகளின் பதின்மூன்றாவது திருத்தம் பற்றிய ஏட்டிக்குப் போட்டியான செயற்பாடுகளையும், வாதப் பிரதிவாதங்களையும் நோக்கும்போது, அன்றைய பொன்னம்பலம் - செல்வநாயகம் காலப் பாராளுமன்றப் பதவிகளுக்காகப் போட்டியிட்டு வந்த தமிழர் மேட்டுக்குடி ஆதிக்க அரசியலின் தொடர்ச்சியினையே காணமுடிகிறது. இது ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தைத் தொடர்ந்தும் தமிழ்த் தலைமைகள் தமது பழைமைவாதப் பிற்போக்குத் தமிழ்த் தேசியவாத நிலைப்பாடுகளாலும், தூர நோக்கற்ற கொள்கைகளாலும் ஏமாற்றி வரும் போக்கினையே வெளிக்காட்டி நிற்கிறது. இவ்வாறு தமிழ்த் தலைமைகளிடையே இடம்பெற்று வரும் பதின்மூன்றாவது திருத்தம் பற்றிய அண்மைய விவாதம் பற்றி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அவ் அறிக்கையில், பதின்மூன்றாவது திருத்தம் என்பது முப்பத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையின் அரசியல் யாப்பிற்கு கொண்டுவரப்பட்ட ஒரு திருத்தமாகும். இது அன்றைய சூழலில் இலங்கையின் இன முரண்பாட்டினைப் பயன்படுத்தித் தமது பிராந்திய மேலாதிக்க நலன்களுக்காக இந்தியாவினால் வலிந்து திணிக்கப்பட்டதாகும். தமிழ் மக்கள் உள்ளிட்ட ஏனைய மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாததும், மிகக் குறைந்த அதிகாரங்களைக் கொண்டதாகவும் பதின்மூன்றாவது திருத்தம் அமைந்திருந்த காரணங்களால் எமது கட்சி அன்று பதின்மூன்றாவது திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதற்கு கீழ் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் பங்குகொள்ளவும் இல்லை.

ஆனால் கடந்த முப்பத்தி நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து வந்த சிங்கள பௌத்த ஆளும் வர்க்கக் கட்சிகள் பல வழிகளிலும் பதின்மூன்றாவது திருத்தத்தை செயலிழக்கச் செய்யவும், இல்லாதொழிக்கவும் முயன்று வந்துள்ளன. இச் சூழலிலேயே இலங்கை அரசியல் யாப்பில் தேசிய இனப்பிரச்சினையைக் குறைந்த அளவிலேனும் அடையாளப்படுத்தும் ஒன்றாக பதின்மூன்றாவது திருத்தம் இருந்து வரும் யதார்த்தத்தை நிராகரிக்க முடியாது. பதின்மூன்றாவது திருத்தத்திலிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீளவும் உட்படுத்திக் கொள்வதுடன் நடைமுறைப்படுத்தாது விடப்பட்டவற்றை அமுல்படுத்த வேண்டும்.

அத்துடன் இன்றைய நிலைமைகளுக்கு ஏற்ப அதிகாரப் பகிர்வை விரிவுபடுத்தி உட்புகுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் எமது கட்சி நீண்ட காலத் தீர்வாக முன்வைத்து வருகின்ற முழுமையான பிராந்திய சுயாட்சிக்குரிய அடிப்படைகளை நோக்கி இப் பதின்மூன்றாவது திருத்தத்தினை விரிவுபடுத்துவதிலிருந்து ஆரம்பிக்க முடியும். இதனைச் சமாதானமாகப் பேசி சிங்கள பௌத்த பேரினவாத ஆளும் வர்க்க சக்திகளிடம் பெற்று விட முடியும் என எமது கட்சி நம்பவில்லை. ஆனால் அதனை வென்றெடுப்பதற்கு உறுதியான கொள்கை அடிப்படையிலான வேலைத் திட்டத்தையும் அதற்கான வெகுஜனப் போராட்டத்தையும் பரந்த முற்போக்கு ஜனநாயக இடதுசாரி சக்திகளுடன் இணைந்து செயல்படுவதை எமது கட்சி முதன்மைப்படுத்துகிறது.

நான்கு தேசிய இனங்களையும் சிறுபான்மைச் சமூகங்களையும் உள்ளடக்கிய இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான பிராந்திய சுயாட்சியும், உட்சுயாட்சிக் கட்டமைப்புகளும் நிறுவப்படுவதையும், அதனை அரசியல் யாப்பு வாயிலாக உறுதிப்படுத்துவதையும் எமது கட்சி தேசிய இனப்பிரச்சினைக்குரிய அரசியல் தீர்வாக வலியுறுத்தி வருகிறது. அத்தகைய அமைப்பு நீண்ட காலத்திலேயே வென்றெடுக்க முடியும் என்பதால், அதனை நோக்கிய நீண்ட அரசியல் போராட்டப் பயணத்தில் அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தினை நிராகரிப்பதற்குப் பதிலாக, அரசியல் யாப்பு அடிப்படையில் மேலும் அதற்குரிய பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெற்று விரிவாக்கி வலுப்படுத்தி முன்னெடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி மக்களை ஐக்கியப்படுத்தும் மக்கள் திரள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனைச் செய்யாது இந்தியாவிடம் மண்டியிட்டுக்கொள்வதோ அல்லது அமெரிக்காவிடம் கெஞ்சி நிற்பதோ அல்லது புலம் பெயர்ந்த தமிழர் மேட்டுக்குடி அமைப்புகளையும் அவர்களது பணக் கட்டுகளையும் நம்பி இனவாத முழக்கங்களை எழுப்பி வாக்குவங்கி அரசியல் செய்வதோ பயனற்றவையாகும்.

எனவே பேரினவாத ஒடுக்குமுறையினை அனுபவித்து வரும் தமிழ்த் தேசிய இனம் இதுவரையான பட்டறிவின் ஊடாக உரிய படிப்பினையினைப் பேசவேண்டும். அதற்குரிய மாற்றுச் சிந்தனை செயற்பாட்டுத் தளங்களில் இளந்தலைமுறை வழிநடக்க முன்வர வேண்டும் எனும் அறைகூவலையே எமது கட்சி விடுக்கின்றது.




புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஊடக அசல் அறிக்கையை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்>>>>> ஊடக அசல் அறிக்கை

13 ஐ கோருவதும் நிராகரிப்பதும் பாராளுமன்ற கதிரைகளைப் பிடிப்பதற்கான போட்டியின் தொடர்ச்சியே

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House